108 ஆம்புலன்ஸ் செயலி சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான செயலியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான செயலியை வியாழக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.  உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான செயலியை வியாழக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.  உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான செயலியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில் அவசரகால, முதலுதவிக்காக 22 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களைப் பயன்பாட்டுக்கு வழங்குவதன் அடையாளமாக 12 வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
புதிய செயலி: 108 அவசர கால கட்டுப்பாட்டு அறையை பொது மக்கள் தொடர்பு கொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவிக்க ஏதுவாக புதிய செயலி (Avasaram 108) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சேவையையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அழைப்பவரின் இடத்தை அறிந்து...இந்தச் செயலி மூலம் அழைப்பவரின் இடம் துல்லியமாகக் கண்டறியப்பட்டு, விபத்து நிகழ்ந்த இடத்துக்கு உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்ப முடியும். பொது மக்கள் இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
108 அவசர கால ஊர்திகள், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகச் சென்றடைந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுநர்களுக்கான செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகள் அளிக்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தை துவக்கும் அடையாளமாக 3 ஓட்டுநர்களுக்கு செல்லிடப் பேசிகளை வழங்கினார்.
இப்புதிய செயலி மூலம், 108 மையக் கட்டுப்பாட்டு அறையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாகப் பெறப்படும் தகவல்கள், அழைப்பவரின் அருகாமையில் உள்ள 108 அவசர கால ஊர்திக்கு பரிமாறப்பட்டு, ஊர்தி ஓட்டுநர் குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவரை சென்றடைய உதவும்.
இரவு நேரங்களில் வழி கூற யாரும் இல்லாத காலங்களில், இந்த செயலி மூலம் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை ஓட்டுநர் அறிந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தைச் சென்றடைய முடியும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com