மழை தரும் நம்பிக்கை: 10 நாள்களில் 15 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர் நடவு

வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஏறத்தாழ 15 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது.
மழை தரும் நம்பிக்கை: 10 நாள்களில் 15 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர் நடவு

வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஏறத்தாழ 15 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா, தாளடி நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சம்பா, தாளடியில் 1.32 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சம்பா சாகுபடி மட்டும் 1.05 லட்சம் ஹெக்டேரிலும், தாளடி 27,000 ஹெக்டேரிலும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை காலங்கடந்து அக். 2 ஆம் தேதி திறக்கப்பட்டதால் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. 
காவிரியில் நீர் வரத்தைத் தொடர்ந்து, தண்ணீர் கிடைத்த இடங்களில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டனர். எனவே, பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரை சம்பா, தாளடியில் கிட்டத்தட்ட 80,000 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டது. 
கடந்த ஆண்டு வறட்சியின் காரணமாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை மாவட்டத்தில் அக். 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. அக். 30 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சராசரியாக 126 மி.மீ. மழை பெய்தது.
மழை தரும் நம்பிக்கையால் இங்கு சம்பா, தாளடி சாகுபடி விறுவிறுப்படைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 15,000 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் மூலம், சம்பா, தாளடியின் பரப்பளவு இப்போது கிட்டத்தட்ட 95,000 ஹெக்டேரை எட்டியுள்ளது. இதில், சம்பா சாகுபடி மட்டும் சுமார் 80,000 ஹெக்டேரிலும், தாளடியில் சுமார் 15,000 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்தால், அடுத்த 10 நாட்களில் சம்பா, தாளடியில் இலக்கை எட்ட வாய்ப்பாக அமையும் எனவும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவெளி விட்டு பெய்து வருவதால், பயிர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 400 ஹெக்டேரில் இளம்பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாததால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரும் வடியத் தொடங்கியது. ஆனால், மாவட்டத்தின் தெற்கு பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மேலும், இப்பகுதியில் பாயும் கல்லணைக் கால்வாயிலும் நீரோட்டம் குறைவாக உள்ளதால், 3 வட்டாரங்களிலும் சம்பா சாகுபடியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com