கொடைக்கானலில் தொடர் மழை: அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இங்குள்ள வெள்ளிநீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, பேரி சோழா அருவி, செண்பகா அருவி, வனப் பகுதியிலுள்ள மூலையாறு அருவி, எலிவால் அருவி, புலிச்சோலை அருவி உள்ளிட்டவைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அப்சர்வேட்டரி பகுதியிலுள்ள பழைய குடிநீர்த் தேக்கம், மனோ ரஞ்சிதம் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அதே போல் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறுகிறது.
கொடைக்கானலில் தற்போது பெய்து வரும் மழை, செண்பகனூர், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, கிளாவரை, கவுஞ்சி, குண்டுபட்டி, வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உருளை, பீன்ஸ், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளின் விளைச்சலுக்கு ஏற்றதாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வனப் பகுதிகளில் வனத்துறையின் சார்பில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஆங்காங்கே புதிய நீர் வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன.
இரவு நேரங்களில் காற்றுடன் மழை பெய்து வருவதால் கொடைக்கானல்- வத்தலகுண்டு- பழனிச் சாலை மற்றும் பூம்பாறை, கூக்கால் சாலைகள், கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் மரக்கிளைகள் விழுந்துள்ளன. அவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் இரவு நேரங்களில் குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. இதனால் குளிர் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com