கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் சுற்றுச்சூழல் பூங்கா: டிசம்பரில் திறப்பு

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ. 4 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்கா அடுத்த மாதம் ( டிசம்பர்) திறக்கப்பட உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூழலியல் பூங்கா பணிகளைப் பார்வையிடும் அதிகாரிகள்.
சூழலியல் பூங்கா பணிகளைப் பார்வையிடும் அதிகாரிகள்.

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ. 4 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்கா அடுத்த மாதம் ( டிசம்பர்) திறக்கப்பட உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் அரசு பழத்தோட்டம் உள்ளது. திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் அரண்மனைக்கான பழத்தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், மகாராஜா கன்னியாகுமரியில் ஓய்வு எடுப்பதற்காகவும் இந்த பழத்தோட்டம் ஏற்படுத்தப்பட்டது. 31 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இப்பண்ணையில் விளையும் பழங்கள் அரண்மனைக்கு அனுப்பப்பட்டன.
திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளத்தில் இருந்து பிரிந்து தமிழகதத்துடன் இணைந்தபோது, இந்த பழப்பண்ணை தமிழக வேளாண்மைத் துறையின்கீழ் வந்தது. இப்பழத்தோட்டத்தில் மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி போன்ற பழவகைகளும், பிச்சி, மல்லிகை, முல்லை, ரோஜா, குரோட்டன்ஸ் போன்ற மலர் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இங்கு 2 பருவங்களிலும் காய்த்து பலன்தரும் மாமரங்கள் உள்ளன. ஆண்டுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு பழவகைகளும், அலங்காரச் செடிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், இங்கு ரூ. 4 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி கடந்த 2014 -ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பூங்காவில் செயற்கை நீரூற்று, சிறுவர் பூங்கா, மூங்கில் பூங்கா, மூலிகைத்தோட்டம், பூந்தோட்டம், அலங்காரச் செடிகள் மற்றும் மரங்கள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன. தற்போது பூங்காவின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அசோக் மேக்ரின், உதவி இயக்குநர் ஷீலா ஜான், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வரத்தினம், உதவிச் செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மகேஷ், இளநிலை பொறியாளர் அமல்ராஜ், கன்னியாகுமரி அரசு பழத்தோட்ட உதவி அலுவலர் ஆ. மணிகண்டன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், இப்பூங்காவின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com