திருச்சி குழந்தைகள் காப்பகத்தில் சிபிஐ சோதனை

பெண் குழந்தைகள் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக, திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிபிஐ போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.

பெண் குழந்தைகள் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக, திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிபிஐ போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான 'மோசே மினிஸ்ட்ரீஸ்' என்ற குழந்தைகள் காப்பகம் 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதனை கிடியோன் ஜேக்கப் (63) என்பவர் நிர்வகித்து வந்தார். 
இங்குள்ள பெண் குழந்தைகளுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகார்களை அடுத்து, சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் கடந்த 2016 செப்டம்பர் 8 - ஆம் தேதி அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அரசின் உரிய அனுமதியின்றி காப்பகம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 
இதுதொடர்பாக 'மாற்றம் இந்தியா' அமைப்பின் நிறுவனர் பாடம் நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கையடுத்து, இக்காப்பகத்தை அரசே ஏற்று நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதையடுத்து சிபிஐ போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து காப்பகத்தில் உள்ள 89 குழந்தைகள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும், காப்பக குழந்தைகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் மரபணு சோதனையும் நடத்தப்பட்டது.
இதனிடையே ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற கிடியோன் ஜேக்கப்பை சிபிஐ போலீஸார் அக்டோபர் 28 -ஆம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த 1 -ஆம் தேதி கிடியோன் ஜேக்கப்பை 5 நாள்கள் காவலில் எடுத்து சிபிஐ போலீஸார் திருச்சியில் விசாரித்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் , செவ்வாய்க்கிழமை காலை ஏடிஎஸ்பி வைஷ்ணவி தலைமையிலான 7 பேர் கொண்ட சிபிஐ போலீஸ் குழுவினர் மற்றும் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் உஷா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகள் உள்ளிட்ட 82 பேரிடம் விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com