பாலிடெக்னிக் ஆசிரியர் பணிகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதா? ராமதாஸ் கேள்வி

பாலிடெக்னிக் ஆசிரியர் பணிகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிடெக்னிக் ஆசிரியர் பணிகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதா? ராமதாஸ் கேள்வி

பாலிடெக்னிக் ஆசிரியர் பணிகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பொறியியல் படித்து வேலையில்லாமல் வாடுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆசிரியர் பணியிடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்த்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு துரோகம் செய்யும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழகத்திலுள்ள அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) காலியாக இருக்கும் 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த 16.06.17 அன்று வெளியிடப்பட்டது. அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 13.08.2017 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு  நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 1058 பணிகளுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் 107 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதுமட்டுமின்றி, இந்த 107 பேருக்கும் வேலை கிடைப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதாவது தமிழக அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங்களில் 10 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் ஆந்திரம், தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு  கிடைக்க வேண்டிய 107 தொழில்நுட்ப ஆசிரியர் பணியிடங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் மாநில அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கூட அரசு வேலைக்கு செல்ல முடியாது. ஆனால், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான கதவுகள் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளன. இதற்காக ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் விதிக்கப்பட்டிருக்கிறது. பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படாது; பொதுப்போட்டி இடங்களில் மட்டும் தான் அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது தான் அந்த ஒற்றை நிபந்தனை ஆகும். இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

உதாரணமாக, மின்னணு மற்றும் தொலைத்தொடர்புத்துறைக்கு மொத்தம் 118 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 இடங்களை பிற மாநிலத்தவர் கைப்பற்றுவர். மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் 28 இடங்களில் 19 இடங்களையும், எந்திரவியல் துறையில் 67 இடங்களில் 46 இடங்களையும் பிற மாநிலத்தவர் தட்டிப் பறிப்பர். இதனால் பொதுப் பிரிவில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. இது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 

அதுமட்டுமின்றி, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக சேர தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்பதோ, தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதோ கூட கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக, பணியில் சேர்ந்த பின்னர் இரு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மொழித் தேர்வில் வெற்றி பெற்றால் போதுமானது என்று சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் அதிகாரப்பூர்வ பயிற்று மொழி என்னவாக இருந்தாலும், நடைமுறையில் அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியில் தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழ் மொழியில் எழுதப்படிக்கக் கூட தெரியாதவர்களால் மாணவர்களுக்கு எப்படி தமிழில் பயிற்றுவிக்க  முடியும்? தமிழ் தெரியாத பிற மாநில ஆசிரியர்களுக்கு ஆங்கிலமும் சரளமாக வரவில்லை என்றால் அவர்கள் எந்த மொழியில் பாடம் நடத்துவார்கள்? என்பன போன்ற வினாக்களுக்கு தமிழக அரசு தான் விடையளிக்க வேண்டும். இதனால் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்வித்தரம் பாதிக்கப்படும்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தமிழகத்திலுள்ள மருத்துவம், மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்பட்டன. அடுத்தக்கட்டமாக தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களும் தாரை வார்க்கப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில்  தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், பட்டதாரிகளும் சொந்த மாநிலத்திலேயே அனாதைகளாகவும், அடிமைகளாகவும் மாறும் ஆபத்து உள்ளது. இதை உணர்ந்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பிற மாநிலத்தவரை ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர் பணி இடங்களையும் முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த  ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com