ஆட்சியர் அலுவலகத்தில் எம்எல்ஏ உள்ளிருப்புப் போராட்டம்

கன்னியாகுமரி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

கன்னியாகுமரி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின் தலைமையில் ஏராளமான திமுகவினர் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கன்னியாகுமரி தொகுதிக்குள்பட்ட அகஸ்தீசுவரம், ராஜாக்கமங்கலம், தோவாளை ஊராட்சி ஒன்றியங்களில் 75 சதவீதம் தெருவிளக்குகள் எரியவில்லை என கூறியும், கழிவுநீர் ஓடைகளை சீரமைக்கக் கோரியும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக் கோரியும் எம்.எல்.ஏ. தலைமையில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக படிக்கட்டில் அமர்ந்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். பின்னர் எம்.எல்.ஏ.விடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குறிப்பிட்ட தேதிக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
 இது குறித்து எம்.எல்.ஏ. ஆஸ்டின் கூறியதாவது: குமரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பேரூராட்சி, ஊராட்சி, வார்டு பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளில் இரவிபுதூர், குலசேகரபுரம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்களே இல்லை. பேரூராட்சிகளிலும் இதே நிலைதான்.
 இந்த வகையில் கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் உள்ள 34 ஊராட்சிகளில், மொத்தம் 26 துப்புரவு தொழிலாளர்களும், 16 பேரூராட்சிகளில் மொத்தம் 77 துப்புரவு பணியாளர்களுமே உள்ளனர்.
 கன்னியாகுமரி தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சி பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. அனைத்து மின் கம்பங்களிலும் எல்.இ.டி விளக்குதான் பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால்தான் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதிலும் தீர்வு இல்லையெனில் தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com