சசிகலா உறவினர் வீடுகள் உள்பட 150 இடங்களில் 2-ஆவது நாளாக சோதனை

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என
சசிகலா உறவினர் வீடுகள் உள்பட 150 இடங்களில் 2-ஆவது நாளாக சோதனை

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
 இந்தச் சோதனையின்போது போலி நிறுவனங்களாகக் கருதப்படுபவை தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
 விடியவிடிய சோதனை: போலி நிறுவனங்களை நடத்தியது, அவற்றில் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை முதலீடு செய்தது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வியாழக்கிழமை 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இவற்றில், ஜெயா தொலைக்காட்சி, "நமது எம்ஜிஆர்' நாளிதழ் அலுவலகங்கள், இளவரசியின் மகன் விவேக் வீடு, மகள் கிருஷ்ணப்பிரியா வீடு என சென்னையில் மட்டும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் 40 இடங்களில் மட்டும் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. மீதமுள்ள இடங்களில் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம், மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீடு, கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவு விடியவிடிய சோதனை நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமையும் இச்சோதனை நீடித்தது.
 தஞ்சையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷின் நண்பர் ராஜேஸ்வரன் வீடு, கடலூர் மாவட்டம், திருப்பாதிரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகர் வீடு, நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்குரைஞர் செந்தில் வீடு, அவரிடம் பணியாற்றிய பாண்டியன் வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மன்னார்குடி வீடு, நீலகிரி மாவட்டம் கொடநாடு கர்சன் பகுதியில் உள்ள க்ரீன் டீ எஸ்டேட், வழக்குரைஞர் செந்திலின் நண்பர் பாலசுப்ரமணியனின் வீடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் ஏ.வி.வேலு வீடு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள திவாகரனின் கார் டிரைவர் வினோத் வீடு, புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடை உள்ளிட்டவற்றில் சோதனை தொடர்ந்தது.
 புதிய இடங்களிலும் சோதனை: வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையின்போது கிடைத்த ஆதாரங்கள், தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெள்ளிக்கிழமை சில புதிய இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வனின் உதவியாளர் கனகராஜின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலுள்ள வீடு, தினகரன், திவாகரன் ஆதரவாளர் வீடுகள், நாமக்கல் வழக்குரைஞர் செந்திலின் பங்குதாரர் சுப்பிரமணி வீடு உள்ளிட்டவற்றில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 அதிகாரிகளுடன் வாக்குவாதம்: சோதனையின்போது சில இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸôருடன் தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com