பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு: சிபிஐ பதில் மனு தாக்கல்

பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக சன் டிவிக்குப் பயன்படுத்தி, அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில்

பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக சன் டிவிக்குப் பயன்படுத்தி, அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதில் மனுவைத் தாக்கல் செய்தது.
 மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
 இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெüதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில், இந்த வழக்கில் தில்லி சிபிஐ போலீஸôர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் மற்றும் கௌதமன், ரவி உள்ளிட்டோர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர்.
 இந்த வழக்கு 14-ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன் வெள்ளிக்கிழமை (நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது கெüதமன், ரவி, கண்ணன் ஆகியோர் மட்டும் ஆஜராகினர். இந்த வழக்கில் சிபிஐ பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அந்த பதில்மனுவில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ முறையாக விசாரித்து அனைத்து ஆவணங்களுடன் குற்றப்பத்தரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரது மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதால் அதனை நிரூபிக்க முடியும். இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 எனவே, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கூடாது என்றும் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விடுவிப்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த பதில் மனுவுக்கு பதிலளிக்க மாறன் சகோதரர்கள் தரப்பில் 3 வார கால அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி 10 நாள்கள் அவகாசம் வழங்கி இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com