மாநகரப் பேருந்து பயணத்தில் விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு

மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கவனக் குறைவால் விபத்துகளை சந்திப்பதைத் தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகரப் பேருந்து பயணத்தில் விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு

மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கவனக் குறைவால் விபத்துகளை சந்திப்பதைத் தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 806 வழித் தடங்களில் 3,700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள்தோறும் சராசரியாக 50 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். மாநகரப் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்போது, பயணிகள் பல நேரங்களில் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்ய நேரிடுகிறது.குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான் கூட்ட நெரிசலில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும்போது அவர்கள் சில நேரங்களில் தவறி விழுந்து விபத்தைச் சந்திக்க நேரிடுகிறது. இதில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன.
 விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை: இதைக் கருத்தில் கொண்டு மாநகரப் பேருந்துகளில் பயணிகள் சந்திக்கும் விபத்துகளைக் குறைக்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பயணிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
 இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: மாநகரப் பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளில் சுமார் 20 சதவீதம், பயணிகளின் கவனக்குறைவால்தான் ஏற்படுகிறது. குறிப்பாக பேருந்து ஓடும்போது ஏறுவது, இறங்குவது, சிக்னலில் திடீரென இறங்குவது, செல்போனில் பேசிக் கொண்டே பேருந்தில் ஏறுவது, இறங்குவது, பேருந்துகளில் உள்ளே இடம் இருந்தாலும் படிகளில் பயணம் செய்வது போன்ற காரணங்களால் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.
 இதைத் தடுக்க, பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது தொடர்பாக மாநகர பேருந்துகளில் போக்குவரத்து ஊழியர்கள், அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
 சிறப்புப் பயிற்சி: ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சி வகுப்புகள் மாதம்தோறும் பணிமனைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகளாக நடத்துகிறோம். பல பேருந்துகளில் தானியங்கி கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படி முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் மூலம் மாநகரப் பேருந்துகளில் ஏற்படும் விபத்துகள் பெருமளவு தற்போது குறையத் தொடங்கியுள்ளன.
 பொதுமக்கள் ஒத்துழைப்புத் தேவை: விபத்தில்லா பயணத்தை ஏற்படுத்த போக்குவரத்து நிர்வாகம் மேற்கொண்டுள்ள நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பும் இதற்குத் தேவைப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் பயணம் செய்வதை அவர்களின் பெற்றோர், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் கண்டிக்க வேண்டும். முடிந்தால் அவர்களும் எங்களுடன் இணைந்து விழிப்புணர்வு, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர் போக்குவரத்து அலுவலர்கள்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com