
சென்னையில் கன மழை பெய்யுமா? இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம்
By DIN | Published on : 14th November 2017 12:29 PM | அ+அ அ- |

சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யுமா என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று நவம்பர் 14ம் தேதி தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 7 செ.மீ. மழையும், ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைப் பெய்யும்.
கன மழையை பொறுத்தவரை காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் நகர்வைப் பொறுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தென் தமிழகத்தில் தற்போதைக்கு கன மழைக்கு வாய்ப்பில்லை. இன்று முதலே தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறைந்துவிடும் என்று கூறினார்.
உள் மாவட்டங்களில் மழை வாய்ப்பு குறித்து கேட்டதற்கு, கிழக்கு திசையில் இருந்து காற்று நகர்வு இருந்தால்தான் உள்மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருக்கும். தற்போது வடக்கு திசையில் நகர்வு இருப்பதால் உள் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்வு இல்லை என்றார்.
மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற்பொழுது வரை இயல்பான அளவை விட 11% வரை குறைவாகப் பெய்துள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.