சிறைத் தொழிலகங்கள் மூலம் ரூ. 37 கோடி லாபம்: சிறைத்துறை டிஐஜி ஆர்.கனகராஜ்

தமிழகத்தில் சிறைத் தொழிலகங்கள் மூலம் ஓராண்டில் ரூ. 37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று சிறைத் துறை டிஐஜி ஆர். கனகராஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சிறைத் தொழிலகங்கள் மூலம் ரூ. 37 கோடி லாபம்: சிறைத்துறை டிஐஜி ஆர்.கனகராஜ்

தமிழகத்தில் சிறைத் தொழிலகங்கள் மூலம் ஓராண்டில் ரூ. 37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று சிறைத் துறை டிஐஜி ஆர். கனகராஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மதுரை மத்தியச் சிறை வளாகத்தில் ஏற்கெனவே சிறிய அளவில் இயங்கி வந்த சிற்றுண்டிக் கூடம் தற்போது நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் மற்றும் பொருள்கள் விற்பனையகத்தை சிறைத் துறை டிஐஜி ஆர். கனகராஜ் திங்கள்கிழமை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
சிறைவாசிகளுக்கு வேலை அளிக்கவும் எதிர்காலத்தில் அவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கவும் சிறைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகளே உணவுக்கூடம், பொருள்கள் விற்பனையகம் ஆகியவற்றை நடத்துகின்றனர். இதில் மதுரை சிறையில் சமையல் தெரிந்த சிறைவாசிகள் மூலம் உணவகம் நடத்தப்படுகிறது. இந்த உணவகத்தை சிறைக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு மலிவு விலையில் டீ, காபி, வடை மற்றும் சிற்றுண்டி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இனிப்புகள், தின்பண்டங்களும் சிறைவாசிகள் மூலமாகவே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதம் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும்.
மதுரை சிறையில் பிளை ஆஸ் செங்கல் தயாரிப்பு, புத்தகம் பைண்டிங் செய்தல், பைல் தயாரித்தல், தபால் கவர் தயாரித்தல் உள்பட பல்வேறு தொழில்களில் 600}க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சிறை வளாகத்தில் தொழிற்கூடமும் இயங்கி வருகிறது. இந்த தொழில்களில் ஈடுபடும் சிறைவாசிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறது.
மத்திய சிறையில் முன்பு மீன் வளர்ப்பு நடந்து வந்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் மீன் வளர்ப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சிறை வளாகத்தில் உள்ள காலி நிலத்தில் சிறைவாசிகள் மூலம் தோட்டம் அமைக்கப்பட்டு காய்கறி பயிரிடப்பட்டு வருகிறது. விரைவில் சிறை பஜார் மூலம் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
சிறையில் உள்ள தொழிற்கூடங்கள் மூலம் சிறைவாசிகளுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் சிறையில் இருந்து வெளியே செல்லும் சிறைவாசிகள் தங்களுக்குத் தெரிந்த தொழிலைக் கொண்டு சுய தொழிலில் ஈடுபடவோ, தொழில் நிறுவனத்தில் வேலைக்குச் சேரவோ முடியும். தமிழகத்தில் உள்ள சிறைத் தொழிலகங்களில் சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் மூலம் கடந்த ஓராண்டில் ரூ. 37 கோடி சிறைத் துறைக்கு லாபம் கிடைத்துள்ளது என்றார். மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.






 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com