ஆனைகட்டியில் கால் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட யானை சாவு

கோவையை அடுத்த ஆனைகட்டி அருகே, கால் புண்ணுக்கு வனத் துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்ட ஆண் யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. 
கோவையை அடுத்த ஆனைகட்டியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆண் யானை.
கோவையை அடுத்த ஆனைகட்டியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆண் யானை.

கோவையை அடுத்த ஆனைகட்டி அருகே, கால் புண்ணுக்கு வனத் துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்ட ஆண் யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. 
கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகிலுள்ள கொண்டனூர்புதூர் வனப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை காலில் புண்ணுடன் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் நவம்பர் 11-ஆம் தேதி வனத் துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிகிச்சைக்கு இடையே அந்த யானை மீண்டும் வனப் பகுதிக்குச் சென்றது. இதனால் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, சாடிவயல் முகாமில் இருந்து கும்கி யானைகளை கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். 
அதன்படி பாரி, சுஜய் ஆகிய இரு கும்கிகளையும் கொண்டனூர்புதூர் பகுதிக்கு திங்கள்கிழமை (நவம்பர் 13) அழைத்து வந்தனர். பின்னர், காலை 11 மணியளவில் வன கால்நடை மருத்துவர்கள் 3 பேர் கொண்ட குழுவினர் யானைக்கு முதலில் துப்பாக்கி மூலமாக மயக்க மருந்து செலுத்தி, கும்கிகள் உதவியுடன் 3 மணி நேரம் சிகிச்சை அளித்தனர்.அதன் பின்னர் அந்த யானை அதே பகுதியில் உள்ள குட்டைப் பகுதிக்குச் சென்றது. 
யானை குணமடைந்து வருவதாக வனத் துறையினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அந்த யானையை 10 பேர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அந்த யானை திடீரென செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தது.
சம்பவ இடத்துக்கு வனத் துறை உயரதிகாரிகள், கோவை கோட்ட வன கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன் ஆகியோர் சென்றனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை யானையின் உடல் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
இதுகுறித்து, வனத் துறையினர் கூறியதாவது: 
யானையின் நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றில் ரத்தம் கட்டி உள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன்னர் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அதன் தாடைப் பகுதியில் இரு துவாரங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த துவாரங்களின் வழியாகப் பெருகிய புழுக்களும் அதிக அளவில் யானையின் உடலில் இருந்தன.
இதனால் யானை உணவு அருந்துவதில் சிக்கல் ஏற்பட்டு, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. யானையின் இரு தந்தங்கள் மற்றும் சில பாகங்கள் ஆய்வுக்காக வெட்டி எடுக்கப்பட்ட பின், யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com