ஆளுநர் ஆய்வுக் கூட்டம் மாநில சுயாட்சியை பாதிக்கும் செயல் அல்ல: அமைச்சர்

கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது மாநில சுயாட்சியை பாதிக்கும் செயல் அல்ல என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது மாநில சுயாட்சியை பாதிக்கும் செயல் அல்ல என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகளை மட்டும் நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
தமிழகத்தில் இதுவரை பதவி வகித்த எந்த ஆளுநரும் அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதில்லை. இந்த நிலையில், கோவையில் அரசு அதிகாரிகளை அழைத்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வில் ஈடுபட்டது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இணைந்து செயல்படுவோம்: இந்த நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநில சுயாட்சியை பாதிக்கும் வகையில் இல்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: 
ஆளுநர் அதிகாரிகளை சந்திக்கக் கூடாது என்று எதுவும் இல்லை. இது மாநில சுயாட்சியை பாதிக்கும் செயல் அல்ல. மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டத்தை அவர் திட்டமிட்டிருக்கலாம். இதனால் மத்திய அரசு, தமிழக அரசின் அனைத்து நிலைகளிலும் தலையிடுவதாக நினைப்பது தவறு. 
மத்திய அரசுடன் மாநில அரசும் இணைந்து செயல்படும்போதுதான் நமக்கான தேவைகளை கேட்டுப் பெற முடியும். அதற்காகத் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்து நடப்பதாகக் கருத வேண்டியதில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை மத்திய அரசு, மாநில அரசு, ஆளுநர் ஆகிய மூவரும் இணைந்து செயல்படுவோம் என்றார் அமைச்சர்.
பெருமைதான்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:
அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது கோவை மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தான். இதில் எந்த தவறு இல்லை. இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்துதான் விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்கள் வேகமாகக் கிடைக்க, ஆளுநருடன் இணைந்து செயல்படுவது ஆரோக்கியமானதுதான். இதை மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகக் கருத முடியாது என்றார்.
அத்துமீறல் இல்லை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறும்போது, அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்திய ஆய்வு கூட்டத்தால் அவர் அத்துமீறி செயல்படுவதாக கூற முடியாது. 
இதேபோல் பல ஆளுநர்கள் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியுள்ளனர். இதற்கு முன்னர் வடகிழக்கு மாநிலத்தில் ஆளுநராக இருந்தபோதும் அவர் அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார். எனவே, கோவையில் அதிகாரிகளுடனான அவரது சந்திப்பில் எவ்விதத் தவறும் இல்லை' என்றார்.
ஆட்சியர் விளக்கம் 
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டறிந்தார். மாவட்டத்தின் வளர்ச்சி விவரம், உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தகவல்களை மட்டுமே அவர் கேட்டறிந்தார். அதைத் தவிர வேறு எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com