சென்னையில் இளம்பெண் எரித்துக் கொலை: சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல்

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் திருமணம் செய்ய மறுத்த பெண் தீயிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சென்னையில் இளம்பெண் எரித்துக் கொலை: சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல்


சென்னை: சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் திருமணம் செய்ய மறுத்த பெண் தீயிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பது என்னவென்றால், ஆகாஷ் திங்கட்கிழமை இரவு இந்துஜா வீட்டுக்குச் செல்லும் போதே, அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு 5 லிட்டர் கேனில் பெட்ரோலை வாங்கிக் கொண்டு, கையில் லைட்டருடன் சென்றுள்ளார். இந்துஜா வீட்டுக்கு அவர் வழக்கமாக செல்வது போலவே சென்று, வாசலில் செருப்புகள் அடுக்கும் அலமாரியில் பெட்ரோல் கேனை வைத்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளார்.

அப்போது இந்துஜாவை திருமணம் செய்து வைக்குமாறு மீண்டும் அவரது தாயை வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுத்துள்ளார். கடைசியாக இந்துஜாவிடம் பேசிக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தாயார் சம்மதித்துள்ளார்.

அப்போது வெளியே சென்ற ஆகாஷ், தான் கொண்டு வந்த பெட்ரோல் கேனை  எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று அறையில் இருந்த இந்துஜா மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு இருவரும் இறந்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதனைத் தடுக்க இந்துஜாவின் தாய் ரேணுகாவும், சகோதரி நிவேதிகாவும் முயன்றதால், கையில் இருந்த லைட்டரை தூக்கி இந்துஜா மீது வீச, அது எதிர்பாராதவிதமாக பற்றியதில் வீடு முழுவதும் தீப்பரவியது. சம்பவ இடத்தில் இருந்து ஆகாஷ் தப்பியோடியுள்ளான்.

இதில் இந்துஜா கரிக்கட்டையானார். அவரைக் காப்பாற்ற முயன்ற தாயராரும், சகோதரியும் படுகாயமடைந்தனர்.

இவர்களது அலறல் குரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், முதலில் ரேணுகா, நிவேதிகா மீது பற்றிய தீயை அணைத்துவிட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அவர்கள் இதுபற்றிக் கூறுகையில், வீட்டுக்குள் நாங்கள் நுழையும் போடு கரும்புகையாக இருந்தது. அங்கே இருந்த ரேணுகாவையும், நிவேதிகாவையும் வெளியே தூக்கி வந்தோம். அப்போது எங்களுக்கு வீட்டுக்குள் இந்துஜா எரிந்து கொண்டிருப்பதே தெரியாது. ரேணுகாவை வெளியே கொண்டு வந்த பிறகு, அவர் சொல்லித்தான் நாங்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்று இந்துஜாவைப் பார்த்தோம்.

அப்போதே அவரது உடல் முழுவதும் எரிந்துபோயிருந்தது. நினைவிழந்த நிலையில்தான் இருந்தார். வீட்டிலிருந்த இரண்டு புடவைகளை எடுத்து அவர் உடல் முழுக்க சுற்றி அவரை வெளியே கொண்டு வந்துவிட்டு ஆம்புலன்ஸ்காக காத்திருந்தோம். ஆம்புலன்ஸ் வந்ததும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர் என்றார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை, ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7- ஆவது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி ரேணுகா (42). இவர்களுக்கு இந்துஜா (22), நிவேதா (20) ஆகிய இரு மகள்களும், மனோஜ் என்ற மகனும் உள்ளனர். சண்முகம் தற்போது கனடா நாட்டில் பணிபுரிகிறார். 

ரேணுகா தனது இரண்டு மகள்கள், மகன் மனோஜ் ஆகியோருடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார். மூத்த மகள் இந்துஜா பி.டெக் படித்தவர். அவர் தற்போது தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அடுத்த மகள் நிவேதா பி.எஸ்.சி. படித்து வருகிறார். மனோஜ் அருகே உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

ஒருதலை காதல்: மூத்த மகள் இந்துஜா பள்ளியில் படிக்கும் போது, அதேப் பள்ளியில் படித்த வேளச்சேரி காமராஜபுரம் பாண்டித்துரை தெருவைச் சேர்ந்த மு. ஆகாஷூடன் (22) நட்பாக இருந்தாராம். இதனால் அடிக்கடி இந்துஜா வீட்டுக்கு ஆகாஷ் அடிக்கடி செல்வாராம். இந்நிலையில், பி.சி.ஏ. படிப்பை பாதியில் நிறுத்திய ஆகாஷ், ஒருதலையாக இந்துஜாவை காதலித்து வந்துள்ளார்.

இந்துஜாவுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடினர். இதையறிந்த ஆகாஷ், தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி இந்துஜாவிடம் கேட்டாராம். இந்துஜா மறுப்பு தெரிவித்ததை அடுத்து ஆகாஷ், இந்துஜாவின் தாயார் ரேணுகாவை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் ரேணுகாவும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்துஜாவை பெண் பார்க்க, மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த சிலர் திங்கள்கிழமை வந்துள்ளனர். இதையறிந்த ஆகாஷ் இரவு இந்துஜா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ள அவர் வற்புறுத்தியபோது, இந்துஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆத்திரமடைந்த ஆகாஷ், வெளியே தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்துவந்து, வீட்டின் முகப்பில் நின்றுகொண்டிருந்த இந்துஜா மீது ஊற்றினாராம். இதைத் தடுக்க முயன்ற ரேணுகா, நிவேதா ஆகியோர் மீதும் அவர் பெட்ரோலை ஊற்றி, இந்துஜா மீது தீ வைத்துள்ளார். இதில் ரேணுகா, நிவேதா மீதும் தீப்பிடித்துள்ளது.

மூவரின் அலறலைக் கேட்டு, அப்பகுதி மக்கள் திரண்டதை அடுத்து ஆகாஷ் தப்பியோடி தலைமறைவானார். தீயில் சிக்கிய மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பலத்த தீக்காயமடைந்த இந்துஜா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். ரேணுகா, நிவேதா ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலைமறைவாக இருந்த ஆகாஷ் செவ்வாய்க்கிழமை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com