தமிழால் இணையுங்கள், தமிழுக்காக இணையுங்கள்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

தமிழால் இணையுங்கள், தமிழுக்காக இணையுங்கள் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.

தமிழால் இணையுங்கள், தமிழுக்காக இணையுங்கள் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
தினமணி நாளிதழ் சார்பில் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் 'கருமூலம் கண்ட திருமூலர்' என்ற தலைப்பில் திருமூலர் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரையாற்றிய நிகழ்ச்சி சென்னை பாரிமுனை
ராஜா அண்ணாமலை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
இத்தகைய நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுவது தமிழுக்கு கிடைத்த வெற்றி. தமிழைப் பாடுவதை குறை, தவறு என்று குறிப்பிட்ட காலத்தில் தமிழுக்கென, தமிழ் இசைக்கென தனி அரங்கம் அமைத்து
தமிழிசையைப் பாட வைத்த பெருமை ராஜா சர் அண்ணாமலை செட்டியாரைச் சேரும். தமிழ், தமிழ் இசைக்கு அவரது பங்களிப்பும், அவரின் வழித்தோன்றல்களின் பங்களிப்பும் அளப்பரியது.
இனி இலக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும்...: தமிழகம் அரசியல் ரீதியாக இரண்டாகப் பிளவுபட்ட காலம் அது. அதாவது ஒரு பக்கம் நீதிக் கட்சியும், மறுபக்கம் நாட்டின் சுதந்திர விடுதலைக்காகப் போராடிய
தேசியக் கட்சியும் (காங்கிரஸ்) தனித் தனியே இருந்தன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இணைப்புப் பாலமாக இருந்தது தமிழ்தான். இந்த இரண்டு இயக்கத்தினரும் ஒரே ஒற்றைக்கோட்டில் இணைந்தனர்.
தமிழுக்குத் தனி அந்தஸ்து வழங்கி, தமிழிசையைப் பாட வழிவகுத்த இந்த மாமன்றத்தில் (ராஜா அண்ணாமலை மன்றம்) வரும் காலத்தில் தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
பாரதியில் தொடங்கிய கட்டுரையாற்றுதல்...: புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 125-ஆவது பிறந்த தினத்தில் தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதைத்
தொடர்ந்து கவிஞர் கண்ணதாசன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அப்பர் பெருமான் ஆகியோருக்கும் கட்டுரைகள் தினமணியில் கவிஞர் வைரமுத்துவால் எழுதப்பட்டன.
அதன்பிறகு மகாகவி பாரதியார் குறித்த கட்டுரை கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி தினமணியில் வெளிவந்தது. அதை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. 
இப்படி அவர் எழுதியதை அவரையே படிக்கச் சொன்னால் இந்த தமிழக மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம் என்பதால் அவரை இதற்கு இணங்க வைத்து முதன்முதலில் சென்னையில் பாரதியார் குறித்து
கவிஞர் வைரமுத்து கட்டுரையாற்றினார். தொடர்ந்து கம்பன், வள்ளுவர், வள்ளலார், இளங்கோவடிகள், தமிழ்த் தாத்தா உ.வே.சா. குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரையாற்றினார். தற்போது திருமூலர்.
இந்தப் பயணத்தை தினமணி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்.
கூட்டத்துக்கு தமிழ்தான் காரணம்: தமிழர்களின் உள்ளத்தில், தமிழர்களின் உதிரத்தில், தமிழ் உணர்வு என்பது வெளிப்படாமல் உள்ளே அமிழ்ந்து கிடக்கிறது. அவற்றைத் தட்டி எழுப்ப, அதைத் தூண்டி விடுவதற்கான காரணிகள் அல்லது தகுந்த ஆள் இல்லை என்பதுதான் தற்போதைய உண்மை. சென்னையில் அடைமழை பெய்துவரும் இந்தச் சூழலில் அரங்கம் நிரம்பி வழிந்து காணப்படும் அளவுக்கு தமிழர்கள் கூடியிருப்பது கடினம். காரணம் தமிழுக்காகக் கூடுவதற்கு தமிழ் நெஞ்சங்கள் இங்கே திரண்டு கிடக்கின்றன. அவர்களைத் தட்டி எழுப்ப ஆள் இல்லை. அவர்களை நாம் புரிந்து
கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஒருங்கிணைப்பதே...: தமிழர்களை ஒருங்கிணைப்பதே தினமணியின் பணி. அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்குக் கூடாத கூட்டம் இன்று இங்கு கூடியுள்ளதற்கு தமிழ்தான் காரணம். அரசியல் பேசாமல், தமிழைப் பேசுங்கள், தமிழர்கள் இணைவார்கள். தமிழ்ப் பேசிக் கொண்டிருந்தோம்; கூட்டம் கூடிக்கொண்டிருந்தது. அரசியல் பேசினோம்; கூட்டம் கலைந்து போயிற்று. 
அரசியல்வாதிகள் உணர வேண்டிய பாடம்: எனவே, அரசியல் கட்சியினர் உணர வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. அது, நீங்கள் தமிழைப் பேசுங்கள் என்பதுதான். எல்லோரும் தமிழ் பேசுங்கள், தமிழால்
இணையுங்கள், தமிழுக்காக இணையுங்கள், கூட்டம் கூடுவதற்காக மட்டுமல்ல, தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காக என்றார் தினமணி ஆசிரியர் 
கி.வைத்தியநாதன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com