திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கோவையில் ஆளுநர் ஆய்வு

மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம்
கோவை சுற்றுலா மாளிகையில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
கோவை சுற்றுலா மாளிகையில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, கோவை -ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள சுற்றுலா மாளிகையில், ஆளுநர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிசந்திரன் மற்றும் ஊரக வளர்ச்சி, சுகாதாரம், வேளாண்மை, கல்வி, நெடுஞ்சாலைத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதில், கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், மாவட்டத்தின் உள்கட்டமைப்பு வசதி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்டறிந்தார்.
இதற்காக அனைத்துத் துறை அதிகாரிகளும் தங்கள் துறை சார்ந்த விவரங்கள், திட்டங்கள் குறித்த கோப்புகளுடன் கூட்டத்துக்கு வந்திருந்தனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தங்களது துறைச் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கணினி வழி செயல் விளக்கம் (பவர் பாயின்ட்) அளித்தனர்.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
அதிர்ச்சியளிக்கிறது
 மாவட்ட நிர்வாக அளவில் தமிழக ஆளுநர் ஆய்வு நடத்துவது அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து திருமாவளவன் சென்னையில் அளித்த பேட்டி:
தமிழகத்தைப் பொருத்தவரை மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் திடீர் ஆய்வை நடத்தியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com