பத்திரப் பதிவில் முறைகேட்டைக் களைய நடவடிக்கை: தமிழக அரசு அதிரடி

பத்திரப் பதிவில் முறைகேடுகளைக் களைவதற்காக தமிழக அரசு புதிய விசாரணை நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
பத்திரப் பதிவில் முறைகேட்டைக் களைய நடவடிக்கை: தமிழக அரசு அதிரடி

பத்திரப் பதிவில் முறைகேடுகளைக் களைவதற்காக தமிழக அரசு புதிய விசாரணை நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
மோசடி பத்திரப் பதிவுகள் மீது இரு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரம், மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட பத்திரப் பதிவாளருக்கு (நிர்வாகம்) அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் பத்திரப் பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:
மோசடியாக சில பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இப் பதிவுகளை அலட்சியமான முறையில் மேற்கொண்டமைக்காக சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவு அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்), மாவட்ட பதிவுத் துறை தலைவர், பதிவுத் துறை தலைவர் ஆகியோரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இப்புகார் மனுக்களை பதிவுத் துறை சட்டம் 1908-இன் கீழ் 68 (2) பிரிவின்படி மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம்) பெற்று விசாரணை நடத்தலாம்.
நேரில் விசாரணை நடத்தலாம்: இந்த அட்டவணையில் விவரங்களைப் பதிவு செய்தப் பிறகு, சொத்தை விற்றவர், வாங்கியவர் மற்றும் சாட்சிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களை நேரில் விசாரணைக்காக அழைக்க வேண்டும். வருவாய்த் துறையிடம் இருந்து நிலம் தொடர்பான ஆவணங்களையும் கேட்டுப் பெறலாம். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரையும் விசாரணைக்காக நேரில் அழைத்து, உரிய நில ஆவணங்களைக் கோரலாம்.
விசாரணைக்கு காலக்கெடு


அனைத்து விசாரணைகளையும் முடித்த பிறகு, விசாரணை அதிகாரியான மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), தான் கண்டறிந்த விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை வாய்மொழியாக வெளியிட்டு அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட மனுதாரருக்குப் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். இந்த விசாரணை நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
இரண்டு அழைப்பாணைகளுக்குப் பிறகும் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் ஆஜராகவில்லையென்றால், விசாரணை அதிகாரி தன்னிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து உத்தரவு வெளியிடலாம். இந்த சுற்றறிக்கை விவரங்களை மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) சீரிய முறையில் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாவிடில், தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று தனது சுற்றறிக்கையில் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் போது அவற்றை உரிய படிவத்தில் முதலில் பட்டியலிட வேண்டும். வரிசை எண், தேதி, மனுதாரர் பெயர், முகவரி, பதிவு ஆவணத்தின் எண் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகத்தின் பெயர், சொத்துகளை விற்றவர், வாங்கியவர், சாட்சியங்களின் விவரங்கள் என 5 பிரிவாகப் பிரித்து ஒரு அட்டவணைத் தயாரிக்க வேண்டும்.
மோசடிக்கு முற்றுப்புள்ளி
ஆள் மாறாட்டம், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சொத்துப் பரிமாற்றம் என பல்வேறு மோசடிகளுக்கு அரசின் திடீர் உத்தரவு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நிலத்தை பலருக்குப் பத்திரப் பதிவு செய்வது, போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவோர் அளிக்கும் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய புகார் மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் தீர்வு காண்பதற்கான வழிவகையை அரசின் புதிய உத்தரவு ஏற்படுத்தியுள்ளது. மோசடி பத்திரப் பதிவுகள் தொடர்பான புகார்களுக்கு இரண்டு மாத காலத்துக்குள் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்குவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை மீறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பத்திரப் பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com