புதுவை தலைமைச் செயலாளரிடம் பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் முறையீடு: 23-ல் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்போம் என அறிவிப்பு

பாஜக நியமன எம்.எல்.எக்கள் சட்டப்பேரவைக்கு நியமிக்கப்பட்டதை செல்லாது என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்த நிலையில் புதிய தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமாரை
புதுவை தலைமைச் செயலாளரிடம் பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் முறையீடு: 23-ல் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்போம் என அறிவிப்பு

பாஜக நியமன எம்.எல்.எக்கள் சட்டப்பேரவைக்கு நியமிக்கப்பட்டதை செல்லாது என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்த நிலையில் புதிய தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமாரை இன்று பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர். 

பாஜகவைச் சேர்ந்த மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை பேரவையின் நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். ஆனால் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார்.

இதற்கிடையே ஆளுநர் மாளிகையில் 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கும் எந்தவித அறிவிப்பின்றி கிரண்பேடி பதவிப் பிராமணம் செய்து வைத்தார். இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஆளும் காங்கிரஸ் அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அக்கட்சியின் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். அது நிலுவையில் உள்ளது.

மேலும் நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்ட 3 பேரும் தங்களுக்கு எம்.எல்.ஏக்களுக்குரிய சலுகைகளை வழங்க வேண்டும் என பேரவைத் தலைவருக்கு கடிதம் அளித்தனர். ஆனால் உரிய வகையில் அறிவிப்பு இல்லை எனக்கூறி வைத்திலிங்கம் அதை நிராகரித்து விட்டார்.

இதற்கிடையே 2 மாத விடுமுறைக்காக பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அமெரிக்கா சென்றிருந்த நிலையில் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் கிடப்பில் இருந்தது. இந்நிலையில் வைத்திலிங்கம் கடந்த அக்டோபர் மாதம் புதுவைக்கு திரும்பினார்.

நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உரிய அறிவிப்பை தலைமைச் செயலாளருக்கு ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் இதில் என்ன முடிவெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் எதிர்நோக்கி இருந்தன.

நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் அரசாணையும் முறையாக இல்லை. இதனால் இது செல்லாது என வைத்திலிங்கம் அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமாரை சந்தித்து முறையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறியதாவது :
நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பான மத்திய உள்துறையின் உத்தரவு முறையாக இல்லை என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கூறுவது அவர் வகிக்கும் பதவிக்கு தகுதி கிடையாது. இந்த உத்தரவில் குடியரசுத் தலைவர் கையெழுத்து போட மாட்டார். மத்திய உள்துறையின் அறிவிப்பை அடுத்து தான் புதுச்சேரி அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நாங்கள் 3 பேரும் தான் நியமன எம்.எல்.ஏக்கள் . தலைமைச் செயலாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளோம். அவர் மத்திய உள்துறையுடன் கலந்து பேசி விட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

எப்படி இருந்தாலும் வரும் 23}ம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்கள் பிரச்னைகளை எழுப்புவோம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com