முல்லைப் பெரியாறு அணைக்கு மின் வசதி: தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையில் மின்வசதி செய்து கொள்ள கேரள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று, குமுளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில்

முல்லைப் பெரியாறு அணையில் மின்வசதி செய்து கொள்ள கேரள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று, குமுளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த 2014 மே 7-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, அணையை பராமரிக்கவும், பருவமழைக் காலங்களில் அணையின் நிலவரத்தைக் கண்டறியவும், 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. 
இந்தக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணைகள் பாதுகாப்பு தலைமைப் பொறியாளர் குல்ஷன்ராஜ், பிரதிநிதிகளாக தமிழக அரசு சார்பில் பொதுப் பணித் துறை கூடுதல் செயலர் பிரபாகரன், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனத் துறை செயலர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு மத்திய கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு தேக்கடி படகு குழாமுக்கு வந்தனர். அங்கிருந்து படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்ற கண்காணிப்புக் குழுவினர், பிற்பகல் 2 மணிக்கு முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, கசிவு நீர் கேலரி மற்றும் அணை அருகே உள்ள 13 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
பின்னர், குமுளியில் உள்ள காண்காணிப்புக் குழு அலுவலகத்துக்கு வந்த மத்திய மூவர் குழுவினர், அங்கு அணை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு வழங்க வனப் பகுதியில் தரை வழியாக கேபிள் பதிக்கவும், அணை நீர்ப்பிடிப்பு மற்றும் அணைப் பகுதியில் கேபிள் பதிக்கும் பணிக்காக 16 மரங்களை வெட்டிக் கொள்ளவும், கேரளத்தில் உள்ள வல்லக்கடவு வழியாக பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு பொருள்கள் கொண்டு செல்லவும், சாலை அமைத்துக் கொள்ளவும் கேரள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று, இக்குழுவின் தமிழக பிரதிநிதி பிரபாகரன் வலியுறுத்தினார்.
கேரள அரசின் பிரதிநிதியான டிங்கு பிஸ்வால் பேசுகையில், 'முல்லைப் பெரியாறு அணை நிலவரம் குறித்து மத்தியக் குழுவினர் உரிய கால இடைவெளியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மழை வெள்ள காலத்தில் அணையின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அணை பராமரிப்புப் பணிகளை தொழில்நுட்ப வல்லுநர் குழு பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.
இதற்கு, மத்திய கண்காணிப்புக் குழு தலைவர் குல்ஷன்ராஜ் பதிலளிக்கையில், 'இரு மாநிலப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் 2018, ஏப்ரல் மாதம் ஆய்வு நடத்தப்படும்' என்றார்.
அப்போது, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com