சுங்கத்துறை இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை

சென்னை சுங்கத்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் வெள்ளிக்கிழமை முடக்கினர்.

சென்னை சுங்கத்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் வெள்ளிக்கிழமை முடக்கினர்.
இது குறித்த விவரம்: சென்னை சுங்கதுறை இணையதளம் www.chennaicustoms.gov.in  என்ற பெயரில் செயல்படுகிறது. இந்த இணையதளம் மூலமே அனைத்துப் பணிகளையும் சென்னை சுங்கத்துறை செய்து வருகிறது. 
இந் நிலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென இந்த இணையதளம் முடக்கப்பட்டது. இதனால் சுங்கத்துறை சார்ந்த அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டன. 
அதே வேளையில் முடக்கப்பட்ட இணையதளத்தில், காஷ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், காஷ்மீரில் நிகழ்த்தப்படும் வன்முறைகளை இந்தியா உடனே நிறுத்தவேண்டும் என்றும், காஷ்மீரை விடுதலை செய்யவேண்டும் என்றும் அந்த ஹேக்கர்கள் பதிவிட்டிருந்தனர்.
இதைப் பார்த்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், தங்களது இணையதளத்தில் ஹேக்கர்களிடமிருந்து மீட்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதேவேளையில் சுங்கத் துறை இணையதளத்தை முடக்கியது பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் எஸ்ஹெச் 11 என்ற ஹேக்கர் குழு என்பது தெரியவந்தது. 
இந்தக் குழுவின் நிறுவனராக பாகிஸ்தானைச் சேர்ந்த வகாஸ் கான் என்பவர் உள்ளார். இந்தக் குழு இந்திய அரசுக்குச் சொந்தமான இணையதளங்களைத் தொடர்ந்து சில ஆண்டுகளாக முடக்கி வருகிறது.
குறிப்பாக, பாதுகாப்புத் துறை சார்ந்த இணையதளங்களை இந்தக் குழு தொடர்ந்து முடக்குகிறது. ஏற்கெனவே இந்தக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை சுங்கத் துறை இணையதளத்தை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
அரசு நிறுவனங்களின் இணையத்தளங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதால், ஹேக்கர்கள் எளிதாக இணையதளங்களை முடக்குவதாக சைபர் குற்ற வல்லுநர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com