திரைப்பட பாணியில்.. காரில் எரிசாராயம் கடத்தியவரை துரத்திப் பிடித்த போலீஸார்

கடலூரில் காரில் எரிசாராயம் கடத்தியவரை திரைப்பட பாணியில் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை துரத்திப் பிடித்தனர். 
திரைப்பட பாணியில்.. காரில் எரிசாராயம் கடத்தியவரை துரத்திப் பிடித்த போலீஸார்


கடலூர்: கடலூரில் காரில் எரிசாராயம் கடத்தியவரை திரைப்பட பாணியில் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை துரத்திப் பிடித்தனர். 

கடலூர்-புதுச்சேரி எல்லையான ஆல்பேட்டையில் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை அதிகாலை உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், காவலர்கள் பாலகிருஷ்ணன், விசுவநாதன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனைக்காக வழிமறித்தனர். இதையடுத்து, கார் ஓட்டுநர் நிறுத்துவது போல காரின் வேகத்தைக் குறைத்தார். ஆனால், அவர் திடீரென காரின் வேகத்தை அதிகரித்துச் சென்றார். இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, காரை மோட்டார் சைக்கிளில் காவலர்கள் துரத்திச் சென்றனர். 

இதையடுத்து, காரின் ஓட்டுநர் காரை முக்கிய சாலையிலிருந்து திருப்பி தெருவுக்குள் ஓட்டினார். பல்வேறு தெருக்களின் வழியாகச் சென்றவர், இறுதியில் வன்னியர்பாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றின் கரைக்குச் சென்றார்.  அங்கு திரும்புவதற்கு வழியில்லாததால் காரை தண்ணீருக்குள் செலுத்தினார். ஆனால், ஆற்றுக்குள் கார் நின்றுவிட்டது. கார் ஓட்டுநரை போலீஸார் துரத்திப் பிடித்தனர். 

பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆற்றிலிருந்து காரை மீட்டனர். அதில் தலா 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 15 கேன்களிலிருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் காரின் ஓட்டுநரை கைது செய்தனர்.

இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம் கூறியதாவது: எரிசாராயம் கடத்தியதாக காரைக்கால் பூவம் கிராமத்தைச் சேர்ந்த ஆ.சண்முகம் (47) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து  ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எரிசாராயம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. காரை துரத்திப் பிடித்த காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மீனாம்பிகை, காவலர்கள் ரமேஷ், ஸ்டாலின், இளஞ்சேரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com