ஒரகடம் அருகே இரு கிடங்குகளில் பதுக்கல்: ரூ. 25 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே பண்ருட்டி கிராமத்தில் இரு கிடங்குகளில் 5 கன்டெய்னர் லாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 25 கோடி மதிப்புள்ள 25 டன் செம்மரக் கட்டைகளை
ஒரகடம் அருகே இரு கிடங்குகளில் பதுக்கல்: ரூ. 25 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே பண்ருட்டி கிராமத்தில் இரு கிடங்குகளில் 5 கன்டெய்னர் லாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 25 கோடி மதிப்புள்ள 25 டன் செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 ஒரகடத்தை அடுத்த பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு பண்ருட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் சொந்தமாக கிடங்குகள் உள்ளன. இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒருவர், தான் டைல்ஸ் வியாபாரம் செய்வதாகவும் அதற்காக கிடங்கு தேவைப்படுவதாகவும் கூறி ரமேஷிடம் கிடங்கை வாடகைக்கு எடுத்ததாகக் கூறப்படுகிறது.
 இதையடுத்து, வாடகைக்கு எடுத்த நபர், நான்கு கன்டெய்னர் லாரிகளை கடந்த சில தினங்களாக கிடங்கில் நிறுத்தி விட்டு பூட்டிச் சென்றுள்ளார்.
 இந்நிலையில், பண்ருட்டி பகுதியில் தனியார் கிடங்குகளில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு பண்ருட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேகமாக வந்த கன்டெய்னர் லாரியை, வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸார் மடக்கினர். ஆனால் கன்டெய்னர் லாரி நிற்காமல் செல்லவே, அதனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீஸார், அந்த லாரியை சோதனையிட்டனர். அதில், செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லாரியின் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதில், கிடங்கில் மேலும் நான்கு லாரிகளில் செம்மரக் கட்டைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 இதையடுத்து, ரமேஷுக்குச் சொந்தமான கிடங்கின் பூட்டை உடைத்து சோதனையிட்டதில், அங்கு நான்கு கன்டெய்னர் லாரிகளிலும் டைல்ஸ்களுக்கு நடுவே செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. மேலும், அதே பகுதியில் ரமேஷிடம் கிடங்கை வாடகைக்குப் பெற்ற சென்னையைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான கிடங்கிலும் போலீஸார் சோதனையிட்டனர். அதில், அங்கு 15 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரு கிடங்குகளில் இருந்தும் ரூ. 25 கோடி மதிப்பிலான 25 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் மற்றும் 5 கன்டெய்னர் லாரிகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடம் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com