"சில்லறை வர்த்தகத்தில் ஜிஎஸ்டி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது'

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரி சில்லறை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறினார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரி சில்லறை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறினார்.
 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கொளத்தூரில் (நவ.19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பேரவையின் மாநிலத் தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியது:
 சரக்கு மற்றும் சேவை வரி சில்லறை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 இதனால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வணிகர்கள், பொதுமக்களின் எதிர்ப்புகளைக் குறைப்பதற்காக வரி குறைப்பு, விதிமுறைகளில் மாற்றம் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டியில் பல விஷயங்கள் குளறுபடியாகவும், மக்களைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதால் அதை ரத்து செய்வதே நிரந்தர நடவடிக்கையாக இருக்கும்.
 கடைகளில் கருப்புக் கொடி: உலக வர்த்தக ஒப்பந்தம் மூலமாக அனைத்துத் துறைகளிலும் அந்நிய ஆதிக்கம் ஏற்பட்டு வருகிறது.
 சில்லறை வணிகத்தை ஒட்டு மொத்தமாக வெளிநாட்டினர் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர். இதனால், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சில்லறை வணிகம் அழிவின் விளிம்பில் உள்ளது. இது குறித்து பல முறை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 எனவே ஜிஎஸ்டி, ஆன்லைன் வர்த்தகம் உள்பட வணிகர்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் ஜனவரி 1-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், கடைத் தெருக்களில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் நடைபெறும். மேலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30-ஆம் தேதி வணிகர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறோம். பொதுமக்கள் மற்றும் வணிகர்களைப் பாதிக்கும் வரிகளை நீக்கும் வரை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றார்.
 உணவகங்களில் ஆய்வு செய்து... உணவகங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டபோதும் உணவுப் பொருள்களின் விலை குறைக்கப்படாதது குறித்து கேட்டபோது, அந்த உணவகங்களில் வணிகர் சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம் என த.வெள்ளையன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com