ஜன.1 முதல் இணைய வழி பத்திரப் பதிவு: கூடுதல் பதிவுத் துறை தலைவர் தகவல்

தமிழகத்தில் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இணையவழியில் பத்திரப் பதிவு தொடங்கப்பட உள்ளதாக, சென்னை கூடுதல் பதிவுத் துறை தலைவர் கே.வி. ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இணையவழியில் பத்திரப் பதிவு தொடங்கப்பட உள்ளதாக, சென்னை கூடுதல் பதிவுத் துறை தலைவர் கே.வி. ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
 பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், பத்திரப் பதிவுத் துறை அலுவலர்களுக்கு இணையவழி மூலம் பத்திரப் பதிவு செய்வது குறித்து பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூடுதல் பத்திரப் பதிவுத் தலைவர் கே.வி. ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
 பத்திரப் பதிவை விரைவுப்படுத்தவும், மக்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், பத்திரப் பதிவு துறையில் 2.0 என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பத்திரப் பதிவு செய்யும் நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பத்திரப் பதிவுகள் சென்னையில் உள்ள மத்திய தகவல் சேமிப்பு மையத்தில் உடனுக்குடன் சேமிக்கப்படும்.
 மேலும், ஆவணங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இத்திட்டம், தமிழகத்தில் தற்போது சோதனை அடிப்படையில் 154 சார்-பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகமெங்கும் இணைய வழி கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம், போலி பத்திரங்கள் தடுக்கப்படும். மேலும், ஆவணப் பதிவின் போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் செல்லிடப்பேசியில் தகவல் அளிக்கப்படும்.
 மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட 9 மாவட்டப் பதிவாளர் அலுவலகம், 102 சார்-பதிவாளர் அலுவலகங்களில் ஆண்டுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன்மூலம், ஆண்டுக்கு ரூ. 800 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்றார்.
 இப் பயிற்சியின்போது, மதுரை மண்டல துணைப் பதிவுத் துறைத் தலைவர் சு. சிவக்குமார் உடனிருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com