தமிழ்ப் பற்றும், உணர்வும் தமிழர்களுக்கு வர வேண்டும்: இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

தமிழ்ப் பற்றும், தமிழ் உணர்வும் தமிழர்களுக்கு வர வேண்டும் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
தமிழ்ப் பற்றும், உணர்வும் தமிழர்களுக்கு வர வேண்டும்: இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

தமிழ்ப் பற்றும், தமிழ் உணர்வும் தமிழர்களுக்கு வர வேண்டும் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
 நாமக்கல் வின்னர்ஸ் சேம்பர் சார்பில், சாதனையாளர்கள், சேவையாளர்களுக்கு வின்னர்ஸ் விருது, பாராட்டு விழா, வின்னர்ஸ் இயக்கத்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா அமைப்பின் தலைவர் என். ரவிச்சந்திரன் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் டி.எம். மோகன் சிறப்பு விருந்தினர்களையும், சாதனையாளர்களையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.
 இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசியது:
 நடிகர் ரஜினி உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர் உடல் நலம் பெற வேண்டி ரசிகர்கள் தங்களை வருத்திக் கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டனர்.
 அந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களைச் சந்திக்க வேண்டும் என ரஜினியிடம் தொடர்ந்து நான் வலியுறுத்தினேன். அதனை ஏற்று ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
 தற்போதைய சூழலில் அவர் அரசியலுக்கு வருவாரா?, மாட்டாரா? என்பது எனக்குத் தெரியாது.
 சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில்கூட தமிழ் ஆட்சி மொழியாக இல்லை. தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் இறக்கும் தருவாயில் கூட எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கினார். ஆனால், அப்போது எழுந்த கோரிக்கை இன்னும் கோரிக்கையாகத்தான் இருக்கிறது.
 தமிழ்ப் பற்றும், தமிழ் உணர்வும் தமிழர்களுக்கு வர வேண்டும். நாட்டு நடப்பை உணர்ந்து நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற மக்கள் பணத்துக்கு ஆசைப்படாமல், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.
 மனிதர்கள் தங்களை சுயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். லட்சியத்தை மனதில் நிலை நிறுத்தி வாழ வேண்டும் என்றார்.
 விழாவில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி கொழந்தவேல் ராமசாமி பேசியது: வள்ளுவர், கம்பர், பாரதி, இளங்கோவையும், சங்க இலக்கியங்களையும் தமிழர்கள் படிக்க வேண்டும். பிழையின்றி படிக்கவும், எழுதவும் இலக்கியங்களை மறு வாசிப்பு செய்ய வேண்டும் என்றார்.
 மலேசிய நாட்டின் ஜெகுர் பகுரி மாநிலத்தின் தமிழ்ச்சங்கத் தலைவர் சின்னப்பன் முத்துசாமி பேசியது: தமிழகத்தில் செயல்படும் அமைப்புகள் தமிழில் பெயர் வைத்துக்கொள்ள வேண்டும். பிற மொழி பெயரில் இயங்கும் அமைப்புகள் தமிழ் மொழியில் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
 கயானா நாட்டின் விவசாயத் துறைக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் துரை வையாபுரி, நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ. சத்தியமூர்த்தி, நாமக்கல் மனவளக் கலை மன்றத் தலைவர் எஸ்.எம்.ராமு ஆகியோர் பேசினர்.
 விழாவில், துரை வையாபுரி, சின்னப்பன் முத்துசாமி, கொழந்தவேல் ராமசாமி ஆகியோருக்கு வின்னர்ஸ் விருது வழங்கி கெüரவிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com