மதுரை மேலூர் நெடுஞ்சாலையில் பந்தல் போட்டு விவசாயிகள் போராட்டம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி மதுரை - திருச்சி நெடுஞ்சாலையின் 4 வழிச்சாலையில் விவசாயிகள் கடந்த 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மேலூர் நெடுஞ்சாலையில் பந்தல் போட்டு விவசாயிகள் போராட்டம்: போக்குவரத்து கடும் பாதிப்பு


மேலூர்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மேலூர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி மதுரை - திருச்சி நெடுஞ்சாலையின் 4 வழிச்சாலையில் விவசாயிகள் கடந்த 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலூர் 4 வழிச் சாலையில் ஷாமியானா பந்தல் போட்டு அமர்ந்த விவசாயிகளின் போராட்டம் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி வணிகர்களும் கடைகளை அடைத்துள்ளனர். 

செயற்பொறியாளர் தலைமையிலான குழுவினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலூரில் நடுரோட்டில் ஷாமியானா பந்தல் போட்டு விவசாயிகள் அமர்ந்துள்ளனர். உணவு, குடிநீர் எதுவும் இன்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் குறித்து அறிந்த அக்கம் பக்கத்து கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் வாகனங்களில் உணவு மற்றும் குடிநீரைக் கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அளித்து வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

போராட்டம் காரணமாக உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என்று காவல்துறையினருடன் பேருந்துப் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் விவசாயிகள் ஏற்பாடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பத்தூர், தஞ்சை செல்லும் பேருந்துகள் சிவகங்கை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம் வழியாக மதுரைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com