அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி: அமைகிறது மூன்றாவது தேடல் குழு- பல்கலைக்கழக பிரதிநிதி ஞானமூர்த்தி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடத்துக்கு மூன்று பெயர்களைத் தெரிவு செய்ய மூன்றாவது தேடல் குழு இப்போது அமைக்கப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி: அமைகிறது மூன்றாவது தேடல் குழு- பல்கலைக்கழக பிரதிநிதி ஞானமூர்த்தி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடத்துக்கு மூன்று பெயர்களைத் தெரிவு செய்ய மூன்றாவது தேடல் குழு இப்போது அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் அண்ணா பல்கலைக்கழக பிரதிநிதியாக பேராசிரியர் ஞானமூர்த்தி இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் கடந்த ஆண்டு (2016) மே 26-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. 
நிராகரித்ததால்... அதன் பிறகு பல மாதங்களுக்குப் பின்னர் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் முதல் தேடல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நிராகரித்தார். 
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என். சுந்தரதேவன், கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் பேராசிரியர் கே. அனந்த பத்மநாபன் ஆகியோர் அடங்கிய புதிய இரண்டாவது தேடல் குழு கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது.
வழக்குத் தள்ளுபடி: இக்குழுவின் பணி இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், பேராசிரியர் கே.அனந்த பத்மநாபன் குழுவில் நியமிக்கப்பட்டது பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிரானது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த சர்ச்சை காரணமாக, தேடல் குழு தலைமைப் பதவியை ஆர்.எம். லோதா ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை, அப்போதைய தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு அனுப்பினார். இதற்கிடையே வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக, லோதாவின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஏற்க மறுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதே நேரம் தமிழகத்துக்கு புதிய முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட்டார். ஆனால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் எந்த முடிவும் தொடர்ந்து எடுக்கப்படாமலேயே இருந்தது.
தேடல் குழு கலைப்பு: இந்நிலையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான தேடல் குழு கலைக்கப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், 4 மாதங்களாக இந்தத் தேடல் குழு மேற்கொண்ட பணிகள் வீணானது.
இதனால், தொடர்ந்து துணைவேந்தர் இல்லாமல் செயல்படும் நிலை பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்டது. பல்கலைக்கழக நலனைக் கருத்தில் கொண்டு துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
பல்கலை. பிரதிநிதி நியமனம்: இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரை தெரிவு செய்ய மூன்றாவது தேடல் குழு அமைக்கும் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன. 
இதில், பல்கலைக்கழகப் பிரதிநிதியாக காஞ்சிபுரம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் மேலாண்மை (ஐஐஐடிடி அண்டு எம்) நிறுவன இயந்திரவியல் துறைப் பேராசிரியர் ஞானமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக ஆட்சிக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் குழுவில் தமிழக அரசு பிரதிநிதியாக முந்தைய குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என். சுந்தரதேவன் தொடர்ந்து நீடிப்பார் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறியது: புதிய தேடல் குழுவுக்கான அரசு மற்றும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். இந்தப் பட்டியல் ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு தனது பிரதிநிதியை ஆளுநர் நியமிப்பார். எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடத்துக்கு 3 பெயர்களைத் தேர்வு செய்யும் பணியை புதிய குழு விரைவில் தொடங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com