இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு!

அதிமுகவின் பெயர், இரட்டை இலை  சின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமையினை முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கீடு செய்து... 
இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு!

புதுதில்லி: அதிமுகவின் பெயர், இரட்டை இலை  சின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமையினை முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.  

அதிமுகவில் நிகழ்ந்த இபிஎஸ் - ஒபிஎஸ் அணிகள் சேர்க்கைக்குப் பிறகு அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது நியமனங்கள் செல்லாது என்றும்,அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி தில்லி சென்றனர். அங்கு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

அத்துடன் முடக்கப்பட்ட கட்சியின் பெயர் மற்றும் சின்னம் இரண்டும் ஒருங்கிணைந்த அணியான தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதே நேரம் டிடிவி தினகரன் தரப்பும் இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு  செய்திருந்தது 

அன்றே அமைச்சர்கள் தலைமையிலான அணி சென்னை திரும்பிய பின்னர் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவின் இரட்டைஇலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

அன்று துவங்கி ஐந்து கட்டங்களாக தேர்தல் ஆணையம் இரு தரப்பினரிடையே தொடர்ந்து விசாரணை நடத்தியது. இரு அணிகளின் தரப்பில் தனித்தனியாக எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேசமயம் இந்தியாவின் முக்கியமான வழக்கறிஞர்கள் இரு தரப்பிலும் ஆஜராகி வாதாடினார்கள்..

விசாரணையின் முடிவில் அதிமுகவின் பெயர், இரட்டை இலை  சின்னம் கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமையினை முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் இந்த உத்தரவினை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com