இரட்டை இலைச் சின்னம்: தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே கசிந்ததால் பரபரப்பு!

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ உத்தரவு அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாவதற்கு முன்பே, ஊடகங்களில் தீர்ப்பு விவரம் கசிந்ததால் பெரும்
இரட்டை இலை சின்னம் கிடைத்ததைத் தொடர்ந்து சென்னை அதிமுக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததைத் தொடர்ந்து சென்னை அதிமுக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்.

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ உத்தரவு அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாவதற்கு முன்பே, ஊடகங்களில் தீர்ப்பு விவரம் கசிந்ததால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. 
இந்த விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்துள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே. நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நவம்பர் 21-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் எந்நேரத்திலும் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. 
இந்நிலையில், வியாழக்கிழமை நண்பகல் தேசிய தொலைக்காட்சிகளிலும் அதைத் தொடர்ந்து தமிழக தொலைக்காட்சிகளிலும் இரட்டை இலைச் சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் அறிவிக்காததால் பிற்பகல் வரை பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பிற்பகலில் உத்தரவு விவரம் ஆணைய இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. 
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ உத்தரவு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அது தொடர்புடைய தகவல்கள் வெளியானதாக புகார் தெரிவித்து டி.டி.வி. தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல் வாயிலாக புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து டி.டி.வி. தினகரன் அணியின் வழக்குரைஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், 'தேர்தல் ஆணையத்தின் உத்தரவு குறித்த நகல் எங்களுக்கு கிடைக்கும் முன்பாகவே அது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜயகுமார் எம்பி ஆகியோரும் உத்தரவு வருவதற்கு முன்பாகவே இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும், வெளிப்படைத்தன்மையில்லாமல் ஒருதலைப்பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்து மின்னஞ்சல் வாயிலாக தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளோம். இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமாக இல்லாததால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை உத்தரவைப் பெறுவோம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com