இலவச வைஃபை வசதி: தமிழகத்தில் முதல் டிஜிட்டல் கிராமமானது அம்மனூர்..! 

காஞ்சிபுரம் மாவட்டம், அம்மனூர் கிராமத்தில் இலவச வைஃபை வசதியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமமாக
அம்மனூர் கிராமத்தில் வைஃபை வசதி குறித்த தகவலுடன் தொங்கவிடப்பட்டுள்ள பதாகை. 
அம்மனூர் கிராமத்தில் வைஃபை வசதி குறித்த தகவலுடன் தொங்கவிடப்பட்டுள்ள பதாகை. 

காஞ்சிபுரம் மாவட்டம், அம்மனூர் கிராமத்தில் இலவச வைஃபை வசதியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமமாக மலர்ந்துள்ளது.
பிஎஸ்என்எல் முயற்சியில், மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி இந்த வைஃபை  வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அந்த வசதி மூலம் விவசாய இடுபொருள்களின் விலை விவரம், மின்கட்டணம், வானிலை அறிக்கை, விவசாயம் தொடர்பான தகவல்கள், வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து வருகின்றனர். இதன் மூலம், அம்மனூர் கிராம விவசாயிகள் பிற கிராம விவசாயிகளுக்கு முன்மாதிரியாக மலரத் தொடங்கியுள்ளனர்.
இக்கிராமத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து வை ஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மாநிலங்களை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். 
அத்துடன் அம்மனூரில் பைபர் ஆப்டிக் கேபிள் (கண்ணாடி இழை கம்பி வடம்) அமைத்துக் கொடுக்க சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் எஸ்.எம். கலாவதி முன்வந்தார். அதைத் தொடர்ந்து அம்மனூரில் கடந்த அக். 10-ஆம் தேதி வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டது.
3 கி.மீட்டர் சுற்றுப் பகுதிகளில் பயன்படுத்தலாம்: இந்த வசதியை கிராமத்தைச் சுற்றிலும் 3 கி.மீட்டர் தூரத்துக்கு பயன்படுத்தும் வகையில் தனியார் நிறுவனம் 4 இடங்களில் நவீன கருவியை பொருத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன் தேவை: கிராமத்தில் ஸ்மார்ட்போன் உள்ள எவரும் இந்த வசதியைப் பயன்படுத்த முடிகிறது. ஒரே நேரத்தில் 200 பேர் இந்த வசதியைப் பெறும் வகையில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 400 மெகாபைட் வரை பதிவிறக்கம் செய்ய முடியும். அத்துடன் 24 மணி நேரமும் இந்த வசதியை கிராமத்தினர் பயன்படுத்த முடியும்.
எளிய தொழில்நுட்ப வசதி: அம்மனூர் கிராமத்திற்குச் செல்லும் எவரும் தங்களின் ஸ்மார்ட் போனில் உள்ள வை ஃபை குறியீட்டை ஆன் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல்லில் தங்களின் செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்தால் போதும் உடனடியாக வைஃபை வசதி கிடைக்கத் தொடங்கிவிடும்.
இதுகுறித்து க்வட்ஜென் வயர்லெஸ் நிறுவனத்தின் மண்டல இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தகிருஷ்ணன் கூறியது: 
அம்மனூர் கிராமத்தில் 3,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் வை ஃபை வசதியைப் பெற முடியும். இந்த வசதியை தொடங்கிய முதல் வாரத்தில் 350 பேர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அக்டோபர் இறுதியில் இதன் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது.
கிராம மக்களைத் தவிர அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரும் இலவச வைஃபை வசதியைப் பெறுவதற்காக அம்மனூர் கிராமத்தை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். கூடிய விரைவில் கிராமத்தினர் அனைவருமே இந்த வசதியைப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.
எதற்காக?: இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துதல், ரயில், பேருந்து பயணத்துக்கு முன்பதிவு செய்தல், விவசாயப் பொருள்களுக்கு நேரடியாக விலை நிர்ணயம் செய்தல், வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள், வானிலை நிலவரம் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த வசதி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கல்வி தொடர்பான தகவல்கள், அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் இந்த வசதி மூலம் பெறுகின்றனர் என்றனர் பிஎஸ்என்எல் அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com