டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வித் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் : குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற வகையில், மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்கள் கல்வித் திட்டத்தை மேம்படுத்த வேண்டும்
மாணவிக்குப் பட்டம் வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. உடன் (இடமிருந்து) தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 
மாணவிக்குப் பட்டம் வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. உடன் (இடமிருந்து) தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 

அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற வகையில், மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்கள் கல்வித் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 13-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
நாட்டின் இளைய தலைமுறையினரை திறன் மிகுந்த சக்தியாகவும், அறிவாற்றல் நிறைந்த சொத்தாகவும் மாற்றும் வல்லமை கல்விக்கே உள்ளது. போட்டியை எதிர்கொண்டு, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தயாராகும் திறன் அனைத்துத் துறைகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றங்களுக்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் கல்வித் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். நாளைய உலகின் தேவைக்கேற்ற வகையில் பழைய கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வகுப்பறைகள் வெறும் பாடம் போதிக்கும் அரங்கமாகச் செயல்படாமல், கலந்துரையாடி மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்தும் களமாக மாற்ற வேண்டும்.
மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கம், பணிவு, நேர்மை, இரக்க மனப்பான்மை, பொறுமை, உண்மை ஆகிய நற்பண்புகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு, ஊக்கம், விடாமுயற்சி, கடும் உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்நிலையைப் பெற முடியும் என்றார் வெங்கய்ய நாயுடு.
தமிழக ஆளுநர்: இதர மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை, தேசிய சராசரியான 24.5 சதவீதத்தை விட அதிகமாக 42.4 சதவீதமாக உயர்ந்திருப்பது பாராட்டத்தக்கது. 
வெளிமாநிலங்களில் இருந்து இங்கு உயர் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கல்வி அறிவாற்றலை மட்டுமின்றி, ஆராய்ச்சித் திறன், படைப்பாற்றலை மேம்படுத்தும் மையமாகத் திகழ வேண்டும் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
விழாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், தலைவர் ஆர்.பி.சத்யநாராயணன், இணை வேந்தர் டி.பி.கணேசன், பதிவாளர் என்.சேதுராமன், மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், இல. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com