தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடியில் நெடுஞ்சாலைகள் விரிவாக்கம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தமிழகத்தில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து
சென்னையில் வியாழக்கிழமை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் கோரிக்கை மனு அளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சென்னையில் வியாழக்கிழமை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் கோரிக்கை மனு அளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில், தேசிய நெடுஞ்சாலை, துறைமுகங்கள், குடிநீர் வழங்கல், நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கப்பல் மற்றும் நிதித் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கட்கரி கூறியது:
தமிழகத்தில் சாலைப் பணிகள் சார்ந்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு ஆய்வுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2,250 கோடி மதிப்பீட்டிலான தாம்பரம்- செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம், ரூ.1,500 கோடி மதிப்பீட்டிலான பூந்தமல்லி-மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலம், ரூ.1,000 கோடி மதிப்பீட்டிலான சென்னை- நெல்லூர் சாலை விரிவாக்கம் ஆகிய திட்டங்களும் அடங்கும்.
அத்துடன், சென்னை-திருப்பதி சாலையில் திருவள்ளூர் நகரையொட்டி சுற்றுச் சாலை அமைக்கப்படும். இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவடையும்போது சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
ரூ.20 ஆயிரம் கோடியில் சென்னை-பெங்களூரு விரைவு சாலை: நாடு முழுவதும் தொழில்சார் விரைவுச் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக தில்லி-ஜெய்ப்பூர்-மும்பை இடையே பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தவிர, நாடு முழுவதும் மேலும் 12 பிரத்தியேக சாலைகள் இதேபோல் அமைக்கப்பட உள்ளன. 
இவற்றில் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடி ஆகும். இதற்கான நில ஆர்ஜிதம் நிறைவுற்றபிறகு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சாலை அமைப்புப் பணிகள் தொடங்கும்.
முக்கியச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றம்: மாநிலத்தில் உள்ள முக்கியச் சாலைகள் சிலவற்றை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும்படி மாநில அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று திருச்சி-காரைக்குடி, விழுப்புரம்-நாகப்பட்டினம், வெள்ளக்கோவில்-சங்ககிரி, மதுரை-கொல்லம், மதுரை-நத்தம், முசிறி-நாமக்கல், திண்டுக்கல்-கொட்டாம்பட்டி, சேலம்-வாணியம்பாடி, திருப்பூர்-ஒட்டன்சத்திரம், பழனி-கொடைக்கானல் இடையேயான மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சாலைகள் அனைத்தும் விரைவில் நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகளாக சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு விரைவில் மேற்கொள்ளப்படும். சேலம், மதுரை ஆகிய நகரங்களைச் சுற்றி வெளி வட்டச் சாலைகள் அமைக்கப்படும்.
விபத்துகள் குறைக்கப்படும்: தரமான சாலைகள் அமைப்பதில் கவனம் செலுத்துவதோடு, விபத்துகளைக் குறைக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது. இதையடுத்து விபத்துகளைக் குறைப்பதற்கான திட்டங்களுக்கு ரூ.2,300 கோடி செலவில் பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 
அதிநவீனப் பேருந்து நிலையங்கள்: போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் வகையில் விமான நிலையங்களைப் போல் அதிநவீன வசதிகளைக் கொண்ட சர்வதேச தரத்திலான பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
ஏற்கனவே சூரத் போன்ற நகரங்களில் இத்தகைய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் அத்தகைய நவீன பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
இதற்கான ஆயத்தப் பணிகளை சாலைப் போக்குவரத்து அமைச்சகம், தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தும். 
இவற்றில் பாதுகாப்பு அம்சங்கள், குளிரூட்டப்பட்ட அரங்கங்கள், பேருந்துகள் இலகுவாக வந்து செல்லும் வசதி, குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அடங்கும் என்றார் நிதின் கட்கரி.
முதல்வர் மனு
மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த கோரிக்கை மனு:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதி வரை வரும் கிருஷ்ணா நதிநீரை பாலாறு வரை நீடிக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது.
அத்திக்கடவு-அவினாசி பாசனத் திட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல், காவிரி நீர் கால்வாய்கள், டெல்டா பகுதிகளை மேம்படுத்தும் திட்டம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டம், சென்னை மாநகர நீர்வழிப் பாதைகளை புனரமைக்கும் திட்டம், கொசஸ்தலை ஆறு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கு நிதியுதவி மற்றும் தேவையான ஒப்புதல்களை அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com