தினகரன் தரப்பில் இருந்து தொண்டர்கள் வந்தால் வரவேற்போம்: ஆர். வைத்திலிங்கம்

டி.டி.வி. தினகரன் தரப்பில் இருந்து தொண்டர்கள் வந்தால் வரவேற்போம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் கூறினார்.
தினகரன் தரப்பில் இருந்து தொண்டர்கள் வந்தால் வரவேற்போம்: ஆர். வைத்திலிங்கம்

டி.டி.வி. தினகரன் தரப்பில் இருந்து தொண்டர்கள் வந்தால் வரவேற்போம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் கூறினார்.
முதல்வர், துணை முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கும் இந்த இயக்கம்தான் உண்மையான அதிமுக என்பதால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியுள்ளது.
டி.டி.வி. தினகரன் விரக்தியில் பேசி வருகிறார். அவர் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதாவதொரு காரணத்தைக் கற்பிப்பார். இத்துடன் அவருடைய கனவுகள் எல்லாம் முடிந்துவிட்டது. தினகரன் தரப்பில் தொண்டர்கள் அதிகமாக இல்லை. அங்கு இருக்கிற தொண்டர்கள் வந்தால் வரவேற்போம் என்றார் வைத்திலிங்கம். 


எதிர்பார்த்ததுதான்!
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ். திருநாவுக்கரசர் கூறினார்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ள அணி, தாங்கள்தான் உண்மையான அதிமுக என உரிமை கொண்டாடினாலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி பலவீனமாகத்தான் உள்ளது. பாஜக தமிழகத்தில் வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதால், வாக்குவங்கியைப் பெற இரட்டை இலை சின்னம் பெற்றுள்ள அணியோடு கூட்டணி அமைக்கும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புபோன்று உள்ளாட்சித் தேர்தலிலும் தீர்ப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஊழல் செய்து முறைகேடாக சொத்து சேர்த்தோரிடம் வருமானவரித் துறை சோதனை மேற்கொள்வது வரவேற்கக்கூடியது. வருமான வரித் துறையினர் ஜெயலலிதாவின் அறை, கொடநாடு, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரிடமும் சோதனை செய்ய வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் புகார் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டோர் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவில்லை.
தமிழகத்தில் வரைமுறைப்படுத்தி கூடுதலாக மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com