மாணவர்கள் போராட்டம் எதிரொலி: கல்லூரிக்கு ஜன. 2 வரை விடுமுறை

சென்னை, செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக அக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னை, செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக அக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஸ்ரீலிங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜா ரெட்டி மகள் துருவ ராக மௌனிகா, சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற பருவத் தேர்வில் மௌனிகா காப்பியடித்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பேராசிரியர்கள், மௌனிகாவைக் கண்டித்தனராம். இதையடுத்து விடுதிக்கு வந்த மௌனிகா தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வது குறித்து அதே கல்லூரியில் படிக்கும் தனது சகோதரர் ராகேஷூக்கு மெளனிகா செல்லிடப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
மௌனிகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அன்று இரவு விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விடுதியில் இருந்த மின் விளக்குகள், மேஜை, டி.வி. உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி அங்கிருந்த பொருள்களைத் தீயிட்டு கொளுத்தினர். இரு கல்லூரி பேருந்துகளின் கண்ணாடிகளையும் மாணவர்கள் உடைத்தனர். பின்னர் விடுதி வளாகத்திலேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீஸாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் ஜனவரி 2-ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்தனர். இதைத் தொடர்ந்து விடுதிகளில் தங்கியிருந்த சுமார் 1,800 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
மாணவர்களை பேருந்துகள் மூலம் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கும் கல்லூரி நிர்வாகத்தினரே கொண்டு விட்டனர். கல்லூரி வளாகத்தில் போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com