மீண்டெழுந்த இரட்டை இலை சின்னம்

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் புகழ்பெற்று விளங்கும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மீண்டும் ஒருமுறை மீண்டெழுந்துள்ளது.
மீண்டெழுந்த இரட்டை இலை சின்னம்

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் புகழ்பெற்று விளங்கும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மீண்டும் ஒருமுறை மீண்டெழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட சின்னமானது, ஏழு மாதங்களுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிளவு ஏற்பட்டது ஏன்? அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று சசிகலா பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் அதிமுக பிளவுபட்டது. கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதியன்று, சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியுமாக அதிமுக இரண்டானது.
இந்த நிலையில், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் அணியினர் மனு அளித்ததால்...: இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டுமென கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து, கடந்த மார்ச் 23-ஆம் தேதியன்று அஇஅதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கம்: சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் சுயேச்சை சின்னங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் காரணமாக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மேலும், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். ஒன்றரை மாதங்கள் சிறையில் இருந்த அவர், கடந்த ஜூன் முதல் வாரத்தில ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இரு அணிகள் இணைந்தன: இந்த நிலையில், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையிலான அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-இல் இணைந்தன. இதனிடையே, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைந்து தீர்ப்பு அறிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணைய வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி அணிகள் சார்பில் நடத்தப்பட்ட பொதுக் குழுவில் இரு அணிகளும் இணைந்ததாகவும், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து நடைபெற்றது. இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் வாதாடினர். இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பினை வியாழக்கிழமை (நவ. 23) வழங்கியுள்ளது.
சுவாரஸ்யமான விஷயம்: தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்க முற்பட்ட போது, எடப்பாடி கே.பழனிசாமி சசிகலா அணியில் இருந்தார். தேர்தல் ஆணையத்தில் பிரதான மனுதாரராக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும், பிரதிவாதியாக சசிகலாவும் இருந்தனர்.
வழக்கின் இடைப்பட்ட காலத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தனி அணி உருவானதால், அவரும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். வழக்கு தொடரப்பட்ட காலத்தில் சசிகலா அணியில் இருந்த அவர், வழக்கு முடியும் நிலையில் அவர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். இது இந்த வழக்கின் கூடுதல் சுவாரஸ்யமாகும்.
அன்று நடந்தது என்ன? இரட்டை இலை சின்னம் இப்போது இரண்டாவது முறையாக முடக்கப்பட்டு மீண்டெழுந்துள்ளது. கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிமுக நிறுவனராக இருந்த எம்.ஜி.ஆர்., மறைந்ததும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி தலைமையில் மற்றொரு அணியும் என அதிமுக இரண்டாக உடைந்தது.
1989-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி அணி படுதோல்வியடைந்தது. 
இதையடுத்து, கட்சியை ஜெயலலிதாவிடமே ஒப்படைக்க ஜானகி முடிவு செய்தார். இதையடுத்து, அதிமுகவுக்கு தலைமையேற்ற ஜெயலலிதாவுக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் வழங்கியது. இதன்பின், ஜெயலலிதா இறக்கும் வரை அதிமுகவில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை.
அவரது மறைவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் அது வழங்கப்பட்டாலும் டிடிவி தினகரன் தலைமையிலான அணி தனியாகவே செயல்பட்டு வருகிறது. 
அதிமுகவின் மிகப் பெரிய பலங்களில் ஒன்றான இரட்டை இலை சின்னம், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியிடம் அளிக்கப்பட்ட சூழலில் தினகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதே கட்சித் தொண்டர்களின் மிகப் பெரிய கேள்வி.


அஇஅதிமுக பெயரை பயன்படுத்தும் நிர்வாகிகள்
 தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்கு முன்பு வரை அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) என பெயர்களைப் பயன்படுத்தி வந்த கட்சி நிர்வாகிகள், தீர்ப்புக்குப் பிறகு அஇஅதிமுக என்ற வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கட்சியின் பெயரையும், சின்னத்தையும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி அணிக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வழங்கியது. இதையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிக்கை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டது. அறிக்கையின் இரண்டாவது பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தங்களது அணிகளின் பெயர் எதையும் குறிப்பிடவில்லை. கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com