அதிமுகவின் அரசியல் அடையாளங்களை அழிக்கும் செயல்களில் பாஜக ஈடுபடுகிறது: பீட்டர் அல்போன்ஸ் 

அ.தி.மு.க.வை நலிவடையச் செய்யும் செயல்களில் பா.ஜ.க. தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பீட்டர் அல்போன்ஸ் சென்னையில் தெரிவித்தார்.
அதிமுகவின் அரசியல் அடையாளங்களை அழிக்கும் செயல்களில் பாஜக ஈடுபடுகிறது: பீட்டர் அல்போன்ஸ் 

அ.தி.மு.க.வை நலிவடையச் செய்யும் செயல்களில் பா.ஜ.க. தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பீட்டர் அல்போன்ஸ் சென்னையில் தெரிவித்தார்.

மக்கள் அரசியல் பயிலரங்கம் சார்பில் பண மதிப்பு இழப்பு, ரபேல் விமான ஒப்பந்தம் ஆகியற்றால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்பது குறித்த கருத்தரங்கம் சென்னை துறைமுகம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மாவட்ட முன்னாள் தலைவர் இரா.மனோகர் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ். பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசியது,
தற்போதைய நிலையில் தமிழக அரசுக்கு மக்கள் மத்தியில் எவ்வித செல்வாக்கும் இல்லை.  சில ஒப்பந்ததாரர்கள் இணைந்து அரசை நடத்துவதுபோலதான் நடைபெற்று வரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

அதிமுக என்ற பலம் வாய்ந்த அரசியல் கட்சியை அதன் அரசியல் அடையாளங்கள் அழிக்கும் செயல்களில் பாஜக திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதை அனைவராலும் உணர முடிகிறது. இக்கட்சியை படிப்படியாக அழித்துவிட்டு அதன் மூலம் பாஜகவை தமிழகத்தில் வளர்த்துவிட முடியும் என பாஜக நம்புகிறது. எனவேதான் அதிமுக-வை வளர்த்துவிடுவது போல போலியான பாசத்தைத்தான் அதிமுக மீது பாஜக காட்டுகிறது என்பதே உண்மை. அமைச்சர்கள், போயஸ் தோட்டம் போன்ற இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதன் மூலம் இக்கருத்தினை உணரலாம்.  மக்கள் மத்தியில் அவமானப்பட்ட அரசாங்கமாக தமிழக அரசு இருந்து வருகிறது. கடுமையான கண்டனத்தை மக்கள் விரைவில் வழங்குவார்கள்.

நீதியை வளைக்கும் பாஜக:  சுராபுதீன் கொலைவழக்கில் வெளியான தீர்ப்பில் இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித் ஷா நிரபராதியாக விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கை நீண்ட நாள்களாக விசாரித்தி வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி திடீரென இறந்து போகிறார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக நீதிபதியின் சகோதரியும், அவரது அப்பாவும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.  இவ்வழக்கு விசாரணையில் சிபிஐ சார்பில் வலுவான வாதங்களை எடுத்துரைக்கவில்லை. இதன் பின்னணியில் பாஜக இருந்துள்ளது என்பதே உண்மை.  

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. போபர்ஸ் வழக்கில் சுமார் ரூ.60 கோடி ஊழல் நடந்ததாகக் கூறி பூதாகரமாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள்,  தற்போது மவுனமாக இருப்பது ஏன்? பாஜக அரசு தொடர்ந்து பெரும் முதலாளிகளுக்குச் சாதகமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மன்மோகன் சிங் ஆட்சியின்போது அம்பானி போன்றவர்கள் மீது போடப்பட்ட வரி ஏய்ப்பு வழக்குகளை படிப்படியாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது மத்திய அரசு.  இதற்கெல்லாம் விடையாக குஜராத் தேர்தலில் தங்களது கடுமையான கண்டனத்தை மக்கள் பதிவு செய்வார்கள் என்பது உறுதி என்றார் பீட்டர் அல்போன்ஸ். 

இக்கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.ஜோதி, சிவ.ராஜசேகரன், எர்ணஸ்ட்பால், சுரேஷ்,  எம்.கண்ணன், எஸ்.மணிபால், எஸ்.எம்.பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com