ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் திமுக-வுக்கு ஆதரவு?

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கடந்த முறையைப்போல் அல்லாமல், திமுக-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் எடுக்க உள்ளன.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் திமுக-வுக்கு ஆதரவு?

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கடந்த முறையைப்போல் அல்லாமல், திமுக-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் எடுக்க உள்ளன.

இப்போதைய அரசியல் சூழ்நிலையே இதற்குக் காரணம் என்றும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, மீண்டும் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முன்னதாக, இந்தத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அப்போது அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன் நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் என்.எம்.மருதுகணேஷ் நிறுத்தப்பட்டார்.

கூட்டியக்கத்தில் ஏற்பட்ட பிளவு: மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை, யாருக்கும் ஆதரவும் தருவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது, கூட்டியக்கத்தில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் போட்டியிடும் முடிவை எடுத்து, வேட்பாளராக ஆர்.லோகநாதன் என்பவரை நிறுத்தியது. இதனால் கூட்டியக்கத்திலும் பிளவு ஏற்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது அந்தத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் விநியோகிக்கப்படுவதை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த தேர்தல் ஆணையம், ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற இருந்த இடைத் தேர்தலை ரத்து செய்தது. 

இப்போது உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மீண்டும் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

இந்த இடைத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது.

அதுபோல, திமுக தலைமையிலான ஆர்ப்பாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாட்டில் மாற்றம்: அண்மைக்கால அரசியல் சூழல் காரணமாக, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அக் கட்சி வெளியிட உள்ளது.

அதுபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விரைவில் தேசிய அளவிலான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கும் என்றும் இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டி கூறியது: பாஜகவையும், வகுப்புவாத சக்திகளையும் முடிவுக்குக் கொண்டுவர, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பது என்ற நிலைப்பாடு கொள்கை அளவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சூழலே இதற்குக் காரணம்.

விஜயவாடாவில் 2018 ஜனவரி 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும். 

எனவே, மாநில அளவிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் இந்த மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. கட்சியின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

மார்க்சிஸ்ட் நிலைப்பாட்டிலும் மாற்றம்? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டிலும் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக, அந்தக் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கோவையில் வரும்30-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து, அந்தப் பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். 

திருமாவளவன் வரவேற்பு: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த இடைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.

வகுப்புவாத, மதவாத சக்திகளை முறியடிக்கும் வகையில், இடதுசாரி கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தேசிய அளவில் ஒத்த கருத்துடைய கட்சிகளுக்கு அல்லது கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில், தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தால் அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கும். அதுபோல மாநில அளவில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை அவர்கள் ஆதரித்தாலும் வரவேற்போம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com