கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து விழுந்த கார்: விபத்துக்குக் காரணம் என்ன?

சோழவரம் அருகே முழுமையாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் சென்ற கார் பாலத்தில் இருந்து தலைக்குப்புற விழுந்ததில், காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து விழுந்த கார்: விபத்துக்குக் காரணம் என்ன?

சோழவரம் அருகே முழுமையாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் சென்ற கார் பாலத்தில் இருந்து தலைக்குப்புற விழுந்ததில், காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்தவர் பழனி (60). இவர், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி நவநீதம் (58). இவர்களது மகள் பவித்ரா (28). பவித்ராவின் கணவர் ஐயப்பன்(30). இவர்கள் நான்கு பேரும், ஐயப்பனுக்குச் சொந்தமான காரில் வியாழக்கிழமை பொன்னேரி அருகே மீஞ்சூரில் உள்ள உறவினர் இல்ல விழாவுக்கு சென்றனர். மணிமங்கலத்தைச் சேர்ந்த கதிர்வேல் (26) காரை ஓட்டினார். விழாவில் கலந்து கொண்டு இரவு 10.30 மணி அளவில் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியே ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே பணிகள் முழுவதும் முடிக்கப்படாத நிலையில் மேம்பாலம் உள்ளது. இதில் எச்சரிக்கை தடுப்புகளோ, வாகனங்கள் செல்லக்கூடாது என்ற அறிவிப்போ அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதை அறியாத ஓட்டுநர் கதிர்வேல் காரை, இந்த மேம்பாலத்தின் மீது ஓட்டி வந்துள்ளார். 

பாதி வழியில்தான் பாலம் கட்டப்படாமல் அந்தரத்தில் நிற்பது தெரிந்தது. ஆனால், அவரால் காரை நிறுத்த முடியவில்லை. இதனால், 30 அடி உயரத்தில் இருந்து கார் தலைக்குப்புற கீழே விழுந்தது. இதில் 5 பேரும் காரில் சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்த இடத்தின் அருகில் இருந்த பொதுமக்கள் காரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் பழனியும், நவநீதமும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பவித்ரா, ஐயப்பன், கதிர்வேல் ஆகியோர் மீட்கப்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பவித்ரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், ஐயப்பன், ஓட்டுநர் கதிர்வேல் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பொதுமக்கள் புகார்: வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் சோழவரம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். 
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க இருபுறமும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதனை இணைப்பதற்காக சாலையில் குறுக்கே பாலம் அமைக்கவில்லை. இதனை அறியாத அந்த கார் ஓட்டுநர் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் வந்ததால், விபத்து ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

பாலத்தின் துவக்கத்திலேயே, பாலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான எந்தத் தடுப்போ அறிவிக்கையோ இல்லாததே இந்த கோர விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com