டிச. 21-இல் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் டிச. 21-இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 21-இல் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்

திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் டிச. 21-இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வரும் திங்கள்கிழமை (நவ. 27) தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய டிச. 4-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு டிச. 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிச.24-இல் எண்ணப்பட உள்ளன.
தமிழக முதல்வரும், ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பரில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச்சில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ரத்து: கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில், திமுக, அதிமுகவின் இரு அணிகள் என முக்கியக் கட்சிகள் களம் இறங்கின. பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததால் இடைத் தேர்தலை கடந்த ஏப். 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. வாக்குப் பதிவு ஏப்.12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இதையடுத்து, இடைத் தேர்தல் நடத்துவதற்கான முடிவை தேர்தல் ஆணையம் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் மீண்டும் இடைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
டிச.21-இல் வாக்குப் பதிவு: இடைத் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் வரும் திங்கள்கிழமை (நவ. 27) தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 4 ஆகும்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிச.5-இல் நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற டிச. 7 கடைசி நாளாகும். வாக்குப் பதிவு டிச. 21-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை டிச. 24-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள்: இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு புதிய திட்டங்களோ, அறிவிப்புகளோ வெளியிடக் கூடாது. மேலும், அங்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அரசு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப் பதிவின் போது அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்களும் இணைக்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் சுமித் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தனர் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில், அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரன், புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன், தேதிமுக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.
இப்போது, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வரும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள சூழ்நிலையில், ஓரிரு நாள்களில் வேட்பாளர்களின் பெயர்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக என்ற பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com