பதிவுத் திருமணம் செய்யும் காதல் ஜோடிகளுக்கு ஒரு செக்!

பதிவுத் திருமணம் அல்லது திருமணத்தை பதிவு செய்ய விருப்பமா? அதற்கு மணமக்களின் விருப்பம் மட்டும் போதாது, வேறு ஒரு விருப்பக் கடிதமும் அவசியமாகிறது இப்போது.
பதிவுத் திருமணம் செய்யும் காதல் ஜோடிகளுக்கு ஒரு செக்!


சென்னை : பதிவுத் திருமணம் அல்லது திருமணத்தை பதிவு செய்ய விருப்பமா? அதற்கு மணமக்களின் விருப்பம் மட்டும் போதாது, வேறு ஒரு விருப்பக் கடிதமும் அவசியமாகிறது இப்போது.

அதாவது, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருக்கும் பதிவுத் துறை அலுவலகங்களில், திருமணப் பதிவு செய்ய வரும் ஜோடிகளிடம், மணமகளின் பெற்றோர் அளிக்கும் ஒப்புதல் கடிதத்தைக் கொண்டுவருமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மணமகனை, பெற்றோரிடம் கடிதம் பெற்று வருமாறு கேட்பதில்லை என்பதே.

சென்னையை சேர்ந்த சந்தியா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணத்தை பதிவு செய்ய விரும்பினார். அவரது கணவர் ரோஹனின் (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பத்தார் திருமணத்தை பதிவு செய்ய திருப்போரூர் பதிவுத் துறை அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது, மணமகளின் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். 

மணமகளின் பெற்றோர் எழுதித் தரும் கடிதம் இல்லையென்றால் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்த தகவல் கிடைத்ததும் எக்ஸ்பிரஸ் குழுவினர் சென்னையில் உள்ள பதிவு அலுவலகங்களுக்குச் சென்று அங்கு பணியாற்றும் அதிகாரிகளை இதுபற்றி கேட்டதற்கு, அவர்கள் ஆமாம், மணமகளின் பெற்றோர் அளிக்கும் ஒப்புதல் கடிதத்தை அவசியம் கேட்கிறோம் என்கிறார்கள்.

இதில் ஒரு படி மேலே போய், காஞ்சிபுரம் மாவட்ட பதிவுத் துறையில், இரு தரப்புப் பெற்றோரின் அனுமதிக் கடிதத்தையுமே கேட்கிறோம். ஏன் என்றால் சட்டத்துக்குப் புறம்பான திருமணங்கள் நடப்பதைத் தடுக்கவே என்று பதிலளிக்கிறார்கள்.

திருப்போரூர் நகர பஞ்சாயத்து அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், மணமகளின் பெற்றோர் அளிக்கும் கடிதத்தை நாங்கள் கண்டிப்பாக கேட்கிறோம். அதுவும் பதிவுத் துறை பொது ஆய்வாளர் அனுப்பிய அறிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

ஆனால், பதிவுத் துறை பொது ஆய்வாளர் குமரகுருபரன் கூறுகையில், இதுபோன்ற எந்த அறிக்கையையும் தான் அனுப்பவில்லை. கடைசியாக ஜனவரி 14ம் தேதி 2016ம் ஆண்டுதான் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளே என்றும், பதிவுத் துறை அதிகாரிகள் இதுபோன்ற கடிதத்தைத் தருமாறு வலியுறுத்த முடியாது. அப்படி செய்தால், அவர்கள் எச்சரிக்கப்படுவார்கள். அதே சமயம், மணமக்கள் தாக்கல் செய்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்று தவறாக இருந்தால், அந்த திருமணப் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் பதிவாளருக்கு உண்டு என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com