தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு குளுக்கோஸ் பாட்டில்கள் விநியோகம் நிறுத்தம்: நோயாளிகள் பணம் கொடுத்து கடைகளில் வாங்கும் அவலம்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் வெளியில் பணம் கொடுத்து குளுக்கோஸ் திரவ பாட்டில்களை வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு குளுக்கோஸ் பாட்டில்கள் விநியோகம் நிறுத்தம்: நோயாளிகள் பணம் கொடுத்து கடைகளில் வாங்கும் அவலம்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் வெளியில் பணம் கொடுத்து குளுக்கோஸ் திரவ பாட்டில்களை வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 162 தாலுகா மருத்துவமனைகள், 79 இரண்டாம் நிலை தாலுகா மருத்துவமனைகள், 1000-க்கும் மேற்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸ் திரவ பாட்டில்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் சார்பில் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட மருந்துக் கிட்டங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது. மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருந்துக் கிட்டங்கிகளில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு வாரம் ஒரு முறை அல்லது தேவைக்கேற்றவாறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 

இந்நிலையில், மருத்துவமனைகளில் பல்வேறு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமானது சலைன் எனப்படும் சோடியம் குளோரைடு திரவம் (குளுக்கோஸ்). காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட சாதாரண நோய்கள் முதல் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளி வரை உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க சோடியம் குளோரைடு திரவம் ஏற்றப்படுவது வழக்கம். 

அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கு ஒரு வாரம் வரை திட உணவு எதுவும் அளிக்கப்படாத நிலையில் அவர்களுக்கு உணவுக்குப் பதிலாக குளுக்கோஸ் திரவம் மட்டுமே ஏற்றப்படும். எனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் குளுக்கோஸ் திரவ பாட்டில்கள் அத்தியாவசியத் தேவை என்பதால் எப்போதும் இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 20 ஆயிரம் குளுக்கோஸ் திரவ பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு நோயாளிகளின் உடலில் நீர்ச்சத்து குறைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு தொடர்ந்து குளுக்கோஸ் திரவம் ஏற்றப்படுகிறது. இதனாலும் குளுக்கோஸ் திரவ பாட்டில்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு கடந்த ஒரு வாரமாக குளுக்கோஸ் திரவ பாட்டில்கள் அனுப்பப்படவில்லை. இதனால் கடந்த சில நாள்களாக கையிருப்பில் உள்ளவற்றை வைத்துச் சமாளித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கையிருப்பும் தீர்ந்து விட்டது. 

இதனால் சில மருத்துவமனைகள் மட்டும் லோக்கல் பர்சேஸ் முறையில் மிகக் குறைந்த அளவு குளுக்கோஸ் பாட்டில்களை கொள்முதல் செய்து தருகின்றனர். மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையிருப்பு நிதி இல்லாததால் குளுக்கோஸ் பாட்டில்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் குளுக்கோஸ் திரவ பாட்டில்களை நோயாளிகளுக்கு வெளியில் இருந்து வாங்கி வரச் சொல்லி அதை பயன்படுத்தி வருகின்றனர். மருந்துக் கடைகளில் குளுக்கோஸ் திரவ பாட்டில்கள் குறைந்தது ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினசரி இரண்டுக்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள் செலுத்த வேண்டிய நோயாளிகள் குளுக்கோஸ் பாட்டில்களுக்கு பணம் செலவழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக ஊழியர்கள் கூறும்போது, அனைத்து மருத்துவமனைகளுக்கும் மாவட்ட மருந்துக் கிடங்குகளில் இருந்து குளுக்கோஸ் பாட்டில்கள் விநியோகிக்கப்படும். ஆனால் தற்போது தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்திடம் இருந்து மாவட்ட மருந்து கிட்டங்கிகளுக்கும் குளுக்கோஸ் திரவ பாட்டில்கள் அனுப்பப்படவில்லை. இதுதொடர்பாக சென்னையில் உள்ள தலைமை மருந்து கிட்டங்கிக்கு தகவல் தெரிவித்தபோது அங்கும் குளுக்கோஸ் திரவ பாட்டில்கள் இருப்பு இல்லை என்று தெரிந்தது. 

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாதம் ஒரு முறை மருந்து மாத்திரைகள் கையிருப்பு, தேவை உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு தேவைக்கேற்றவாறு பிரித்து அனுப்பப்படும்.

இந்நிலையில் மருத்துவமனைகளில் குளுக்கோஸ் திரவ பாட்டில்களின் தேவையைக் கணக்கில் கொண்டு கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் குளுக்கோஸ் திரவ பாட்டில்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தட்டுப்பாடு குறித்து தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

பொதுமக்களை வெளியில் சென்று வாங்குமாறு கூறினால் அவர்கள் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே நிலைமை மோசமாவதற்குள் உடனடியாக குளுக்கோஸ் பாட்டில்களை கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எதிர்பாராவிதமாக குளுக்கோஸ் பாட்டில்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு குளுக்கோஸ் பாட்டில்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே குளுக்கோஸ் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com