புதிய ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால் அரசியலிலும், சட்டப்பேரவையிலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் 113 உறுப்பினர்களின் ஆதரவுதான் உள்ளது என்று தேர்தல் ஆணையத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணி சார்பில் வெளிப்படையான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்கும் புதிய ஆளுநர் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்ற வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) : புதிய ஆளுநருக்குப் பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் வகையில் அவர் செயல்பட வேண்டும். அனைவருக்கும் பொதுவானவராக அவர் செயல்பட வேண்டும்.
அன்புமணி (பாமக): இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தின் ஆளுநர் பதவி இவ்வளவு காலம் காலியாக இருந்தது இதுவே முதல்முறையாகும். ஆளுநர் பதவி காலியாக இருந்த காலத்தில் தமிழக அரசின் நிர்வாகம் கடிவாளமில்லாத குதிரையாக பயணித்துக் கொண்டிருந்தது. அனுபவம் வாய்ந்த தற்போதையஆளுநர் தமிழகத்தில் நிலவும் குழப்பங்களுக்குத் தீர்வு காண வேண்டும்.
கனிமொழி (திமுக): புதிய ஆளுநருக்குப் பல்வேறு பொறுப்புகள் உள்ளன. மக்களின் தேவையையும், எதிர்க்கட்சிகளின் நியாயத்தையும் உணர்ந்து ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறோம்.
ஜி.கே.வாசன்(தமாகா): தமிழகத்துக்கு முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, நடுநிலையோடு ஜனநாயக ரீதியாக செயல்பட்டு, பொதுமக்கள் நலன் காக்க சிறப்பான பணியை மேற்கொள்ள வேண்டும். 
தொல்.திருமாவளவன் (விசிக): புதிய ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடமைகளை ஆற்றுவார் என எதிர்பார்க்கிறோம். அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைச் சீர்செய்து, அரசியலில் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
கே.எம்.காதர் மொகிதீன்(முஸ்லிம் லீக்): நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண நிலையை மாற்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கையை புதிய ஆளுநர் ஏற்படுத்த வேண்டும். 
ஜவாஹிருல்லா (மமக): பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்ட புதிய ஆளுநர் தற்போதைய அரசியல் சூழலில் நடுநிலையான முடிவுகளை எடுக்க வேண்டும். அவருக்கு வாழ்த்துகள்.
ஆர்.சரத்குமார் (சமக): சவால்கள் நிறைந்த தற்போதைய தமிழக அரசியல் சூழலில், புதிய ஆளுநரின் பணி செம்மையாக அமைய அவரின் அனுபவம் கைகொடுக்கும். வாழ்த்துகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com