திரையுலகினர் கோரிக்கைகளை வைத்தால் அரசு பரிசீலிக்கும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

திரையுலகினர் கோரிக்கைகளை வைத்தால் அதை அரசு பரிசீலிக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைத்து சிவாஜி சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைத்து சிவாஜி சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

திரையுலகினர் கோரிக்கைகளை வைத்தால் அதை அரசு பரிசீலிக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை அடையாறில் தமிழக அரசின் சார்பில் ரூ. 2.8 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மணிமண்டபத்தைத் திறந்து வைத்து பேசியதாவது: 
தெளிவான, உணர்ச்சிப்பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல் வளமும், தலை சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால் "நடிகர் திலகம்' என்றும், "நடிப்புச் சக்கரவர்த்தி' என்றும் புகழப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். நாடே போற்றும் இந்த நடிகருக்கு, மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி நிறைவு பெற்று, அவர் பிறந்த நாளன்றே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தமிழ் மொழிக்காகப் பாடுபட்ட தமிழ்ச்சான்றோர்கள், தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் நமது நாட்டுக்கு ஆற்றிய தொண்டினை இளைய தலைமுறையினரும், வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்கு மணிமண்டபங்கள் அமைத்த, திருவுருவச் சிலைகளை நிறுவிய பெருமை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு.
அவருடைய நல்லாசியுடன் செயல்படும் இந்த அரசு, தலைவர்களுக்கு மணிமண்டபங்கள் அமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு, அவர்களுடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள், சின்னத்திரை நடிகர்களுக்கான தமிழக அரசின் விருதுகள், சென்னையில் விரைவில் சிறப்பான முறையில் விழா எடுத்து வழங்கப்படும்.
நடிகர் சங்கக் கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்துக்கு முறையாகக் கொண்டு வரப்பட்டால், அதுகுறித்து அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
மீன் வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்: சிவாஜியைப் போன்று தற்போதுள்ள நடிகர்களால் நடிக்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் நடிகருக்கு சென்னையின் பிரதான இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் நடித்தப் படங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் கம்பீரமாக வசனங்கள் பேசுவதும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. அவருடைய வசனங்களைக் கேட்டுத்தான், தமிழை வேகமாக வாசிக்க, பிழையில்லாமல் உச்சரிக்கக் கற்றுக்கொண்டேன் என்றார் அவர்.
விழாவில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், கார்த்தி, விஷால், ராஜேஷ், சரத்குமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் பிரபு உள்ளிட்ட சிவாஜிகணேசனின் குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com