மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள்: மீண்டும் பழைய நடைமுறை பின்பற்றப்படுமா?

மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள்: மீண்டும் பழைய நடைமுறை பின்பற்றப்படுமா?

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளுக்கு மாநில அளவிலான மூப்பு நடைமுறை பின்பற்றுவதால் பல மாவட்டங்களில் விவசாயிகள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளுக்கு மாநில அளவிலான மூப்பு நடைமுறை பின்பற்றுவதால் பல மாவட்டங்களில் விவசாயிகள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பருவமழை தொடர்ந்து கிடைத்து வந்தபோது நீர்ப்பாசனத் திட்டங்களில் இருந்து பாசனப் பகுதிகளின் விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பதில் எவ்விதப் பிரச்னையும் எழவில்லை. குறுவை, சம்பா என இரு பருவங்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே மாறி வரும் பருவமழை, வறட்சி காரணமாக பாசனத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் தண்ணீர் திறப்பது கேள்விக் குறியாக இருந்து வருகிறது. 
நேரடிப் பாசனத் திட்டங்களில் இருந்து விவசாயத்துக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை விவசாயிகள் நம்பியுள்ளனர். அத்தகைய சூழலில் விவசாய மின் இணைப்புகள் அவசியமாகிறது. பாசனத் திட்டங்களில் இருந்து தண்ணீர் கிடைப்பது எவ்வளது அரிதாக மாறிவிட்டதோ, அதைவிட விவசாயத்துக்கான இலவச மின்இணைப்புப் பெறுவது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 21 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. நீர்த்தேக்கங்களில் இருந்து பாசனம் பெறும் மாவட்டங்களில் இலவச மின் இணைப்புகள் குறைவாகவே இருந்தன. பருவம் மாறாமல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேரடி நீர்ப்பாசன வசதி இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்இணைப்பு அவசியம் ஏற்படவில்லை. இப்போது, மாறிவிட்ட சூழலில் நிலத்தடி நீரைச் சார்ந்து இருப்பதால், அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய இணைப்புக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4.5 லட்சம் பேர் விவசாய மின் இணைப்புகளுக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இலவச விவசாய மின்இணைப்புகளுக்கு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் மின்இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்ட அளவிலான பதிவுமூப்பு பின்பற்றப்பட்ட நிலையில், தற்போது மாநில அளவிலான மூப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்துக்கு 40 ஆயிரம் மின் இணைப்புகள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இதில் நேரடி நீர்ப்பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மின் இணைப்பு ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதிலும் கடந்த 2000-ஆவது ஆண்டு வரை பதிவு செய்தவர்களுக்கு இப்போது தான் மின்இணைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மொத்த ஒதுக்கீட்டில் மாவட்டங்களுக்குச் சமமாகப் பிரிக்கும்போது காத்திருப்போர் எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்தது. இப்போது மதுரை மாவட்டத்துக்கு 140 இணைப்புகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆனால் பல மாவட்டங்களுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மின்இணைப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களை மாநில அளவில் ஒரே பதிவு மூப்பு கொண்டு வரும் வகையில் அரசு இந்த புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி கணக்கிட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மின் இணைப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றனர்.
இதுகுறித்து பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் மதுரை குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி திருப்பதி கூறியது:
பெரியாறு பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்படும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் பல ஆண்டுகளாகவே விவசாய மின்இணைப்பு பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஒரு போகத்துக்கே தண்ணீர் திறக்கப்படவில்லை. பருவமழையும் பொய்த்துவிட்டது. இதனால், அதிகம்பேர் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் விவசாய மின்இணைப்பு ஒதுக்கீடு வழங்கவில்லை. முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 40 ஆயிரம் இணைப்புகளிலும், மதுரை மாவட்டத்துக்கு மிகச் சொற்பமாகவே கிடைத்திருக்கிறது. தற்போது விவசாய மின்இணைப்புக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகிறது. புதிய நடைமுறையால் மின் இணைப்பு மேலும் பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, முந்தைய நடைமுறைப்படி மாவட்ட அளவிலான மூப்பு பின்பற்ற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com