மேட்டூர் அணையிலிருந்து இன்று டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (அக்.2) தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில் மூன்று அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். 

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (அக்.2) தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில் மூன்று அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். 
மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஜூன் 12 -ஆம் தேதி முதல் ஜனவரி 28 -ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பு ஆண்டில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து, பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 93.93 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 57.25 டி.எம்.சி.யாக இருந்தது.
நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியதால், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை வரலாற்றில் 84-ஆவது ஆண்டாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், தங்கமணி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், மேட்டூர் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் கதவணைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும். தண்ணீர் திறப்புக்கான ஆயத்தப் பணிகளில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com