கோடியக்கரையில் சோழர் கால கலங்கரை விளக்கத்துக்கு தடுப்பு அரண்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தின் பீடத்தை பாதுகாக்க
நாகை மாவட்டம், கோடியக்கரை கடலோரத்தில் சேதமடைந்த சோழர் கால கலங்கரை விளக்கத்தின் எஞ்சிய பகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அரண்.
நாகை மாவட்டம், கோடியக்கரை கடலோரத்தில் சேதமடைந்த சோழர் கால கலங்கரை விளக்கத்தின் எஞ்சிய பகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அரண்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தின் பீடத்தை பாதுகாக்க அரண் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியையொட்டிய வங்காள விரிகுடா கடலும், பாக் நீரிணைப்பும் இணையும் கரையோரத்தில் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் செயல்பட்டு, பின்னர் சேதமடைந்தது.
இது கி.பி. 907 -ஆம் ஆண்டு முதல் கி.பி. 955 ஆண்டு வரையில் ஆட்சி செய்த முதலாம் பராந்தக சோழ மன்னரால் செங்கற்கலால் கட்டப்பட்டது. விளக்குகளுக்கு பதிலாக விறகுகளைக் கொண்டு தீ மூட்டி, அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்களுக்கு இது கலங்கரை விளக்கமாக திகழ்ந்துள்ளது.
இந்த கலங்கரை விளக்கம் காலப்போக்கில் சேதமடைந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 15 அடி உயரம் வரையிலான பகுதி மட்டும் தரைப் பரப்போடு காணப்பட்டது.
அதுவும், 2004 -ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை எனும் சுனாமியின்போது மேல்கட்டமைப்பு பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி, தரைப் பகுதியில் பீடம் மட்டுமே எஞ்சியது. இந்த இடம் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் அவ்வப்போது கடல் நீர் உள்புகும் பகுதியாகும்.
வரலாற்று சிறப்பு மிக்க சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தின் எஞ்சிய பகுதியை சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் என பல தரப்பினர் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர்.
இந்த பகுதியை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுகளை கோரி வந்தனர். இதையடுத்து, வனத்துறையின் பராமரிப்பில் பீடத்தைச் சுற்றிலும் பனை வாரைகளால் ஆன தாற்காலிக தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், தனது குடும்பத்தினருடன் அண்மையில் சுற்றுலா சென்றபோது, கலங்கரை விளக்கத்தின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளார். இதில் ஆர்வம் செலுத்திய அவர், எஞ்சிய பகுதியை பாதுகாக்கவும், கலங்கரை விளக்கத்தின் வரலாற்று சுருக்கங்களை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சம் மதிப்பில் தடுப்பு அரண் அமைக்கப்பட்டு, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அத்துடன், கலங்கரை விளக்கத்தின் வரலாற்று சுருக்கம் எழுதப்பட்ட பலகையும் வைக்கப்பட்டிருப்பது பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த பணி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
கோடியக்கரையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தைத் தொடர்ந்து, இதன் அருகே 1890 -ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது.
இதேபோல், சுதந்திரத்துக்குப் பிறகு படகுத் துறை அருகே கட்டப்பட்ட புதிய கலங்கரை விளக்கம், 1997-இல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com