டெங்கு காய்ச்சல்: முதல்வர் அவசர ஆலோசனை

தமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை (அக்.2) அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை வழங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
தமிழகத்தில் டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை வழங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

தமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை (அக்.2) அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தில், 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு, டெங்கு காய்ச்சலின் தாக்கம் நிகழாண்டு அதிகரித்துள்ளது. கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. 
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் மேலாண்மை குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடைபெற்றது. 
10 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: காய்ச்சல் பாதிப்பு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் நிகழாண்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் காணப்படுகிறது. இதுவரை டெங்குவுக்கு 23 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கையை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
வியாழக்கிழமை ஒழிப்பு தினம்: டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையின் அடிப்படையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் அரசு அலுவலகங்களில் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில், வளாகத்தில் காணப்படும் பொருள்களை அப்புறப்படுத்துவது, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்டப் பணிகளில் கட்டாயம் ஈடுபட வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு, கொசு ஒழிப்பு மருந்து அடிப்பது ஆகிய பணிகளைத் தீவிரப்படுத்தவும், இந்தப் பணிகள் சரியாக நடைபெறுவதை முறையாகக் கண்காணிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தடுப்பு நடவடிக்கையாகப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் தொடர்ந்து 5 நாள்கள் நிலவேம்பு குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேரடிக் கண்காணிப்பு: தமிழகத்தில் மர்மக் காய்ச்சல் என்று எதுவும் இல்லை. 29 வகையான காய்ச்சல்களைக் கண்டறியும் வசதி தமிழகத்தில் உள்ளது. எனவே, காய்ச்சல் வந்த உடனேயே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 5 நாள்கள் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார் அவர்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, மக்கள் தொகையில் ஆண்டு முழுவதும் 1 சதவீதம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு காணப்படும். மழைக் காலங்களில் இந்த எண்ணிக்கை 1.5 முதல் 2 சதவீதமாக அதிகரிக்கும். சென்னை அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு சுமார் 30 காய்ச்சல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 700 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படுகின்றனர்.
10 சதவீதத்தினருக்கு பாதிப்பு: 10,000 பேர் அனுமதிக்கப்பட்டால் அவர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானோருக்கு மட்டுமே உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். 
எனவே, பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். ஒரு வீட்டில் டெங்கு கொசு உற்பத்தியானால் 500 மீட்டர் சுற்றுப்புறத்தில் அதனால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றார் அவர். 
மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்டோர் ஆலோசனையில் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com