மதிமுக சார்பில் சென்னையில் நவ.20-இல் மாநில சுயாட்சி மாநாடு: தி.மு.க.வுக்கு அழைப்பு: வைகோ பேட்டி

மதிமுக சார்பில் சென்னையில் நவ. 20-ஆம் தேதி நடத்தப்படும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக சார்பில் சென்னையில் நவ.20-இல் மாநில சுயாட்சி மாநாடு: தி.மு.க.வுக்கு அழைப்பு: வைகோ பேட்டி

மதிமுக சார்பில் சென்னையில் நவ. 20-ஆம் தேதி நடத்தப்படும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் வைகோ அளித்த பேட்டி:-
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. நாட்டில் ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற நிலையை உருவாக்கவும் முயற்சித்து வருகிறது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது.
இத்தகைய சூழலில் மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. எனவே, திராவிட இயக்கத்தின் 101-ஆவது ஆண்டையொட்டி மதிமுக சார்பில் சென்னையில் நவ.20-ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்பட உள்ளது.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் தலைவர்களை அழைக்க உள்ளோம். பரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல், பினராயி விஜயன், யஷ்வந்த் சின்ஹா, ராம்ஜெத் மலானி ஆகியோருக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது. எந்தெந்த வகையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்பது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
மாநில மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பதே மதிமுகவின் நிலைப்பாடு. இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்.
முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: கோவையில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1960-இல் தொடங்கப்பட்ட மத்திய அரசு அச்சகத்தை, மகராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அமைந்துள்ள அச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு அச்சகத்தை மாற்றிவிட்டு, அந்த அச்சகம் அமைந்திருக்கும் 132.7 ஏக்கர் நிலப் பரப்பை விற்பனை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எந்த நிபந்தனையும் இன்றி கூட்டுறவு உள்ளிட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும். சிவாஜி கணேசன் சிலை பீடத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி பெயர் நீக்கப்பட்டது தவறு. அவருடைய பெயர் மீண்டும் இடம்பெறச் செய்யவேண்டும் என்றார் அவர்.
முன்னதாக நடைபெற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்று பேசிய வைகோவை சிங்களர் தாக்க முயன்றதற்கு மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com