இந்த ஆண்டு புதுவரவு: குழந்தைகளை மகிழ்விக்க பட்டாசு துப்பாக்கி ... விண்ணைக் கலக்கும் கோல்டன் ஆக்டோபஸ்...

தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு புது வரவாக குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பட்டாசு துப்பாக்கியும், விண்ணில் சென்று வெடிக்கும் வகையில் கோல்டன் ஆக்டோபஸ் உள்ளிட்ட ரகங்களும்
இந்த ஆண்டு புதுவரவு: குழந்தைகளை மகிழ்விக்க பட்டாசு துப்பாக்கி ... விண்ணைக் கலக்கும் கோல்டன் ஆக்டோபஸ்...

தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு புது வரவாக குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பட்டாசு துப்பாக்கியும், விண்ணில் சென்று வெடிக்கும் வகையில் கோல்டன் ஆக்டோபஸ் உள்ளிட்ட ரகங்களும் அறிமுகமாகியுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்கள், பல புதிய ரக பட்டாசுகளை தீபாவளி பண்டிகைக்கு அறிமுகம் செய்வது வழக்கம். புதிய ரக பட்டாசுகளை உருவாக்குவதற்குகாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தனியே ஆய்வுக் கூடங்களை அமைத்துள்ளனர். இங்கு ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சிவகாசியில் உள்ள மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் பரிசோதனைக்கு அளிப்பார்கள். அவர்கள் தங்கள் ஆய்வுக் கூடத்தில், அந்தப் பட்டாசில் கலந்துள்ள வேதியியல் பொருள்களின் சதவிகிதம், சத்தம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பின்னர், தயாரிக்க அனுமதி வழங்குவார்கள்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு குழந்தைகளுக்காக பவர் ரிங்கர்ஸ் மற்றும் டெர்மிஆடோர் ஆகிய புதிய ரக துப்பாக்கிகள் அறிமுகமாகின்றன. ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்காக பொட்டு கேப் உருவாக்கப்பட்டது. அதை கல்லில் வைத்து தட்டி வெடித்தனர். பின்னர் ரோல் கேப் வந்தது. துப்பாக்கியில் ரோல் கேப் வெடிகளை மாட்டி சுட்டு குழந்தைகள் மகிழ்ந்தனர். 
இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ள டெர்மி அடோர் என்ற வகை துப்பாக்கி, அசல் துப்பாக்கி போலவே இருக்கும். துப்பாக்கி குண்டுக்குப் பதில் பிளாஸ்டிக் வளையத்தில் மருந்து செலுத்தப்பட்ட சதுர சாதனம் உள்ளது. அந்த மருந்து செலுத்தப்பட்ட பகுதியை துப்பாக்கியில் பொருத்திவிட்டால் 8 முறை தொடந்து வெடிக்கலாம். அடுத்தடுத்து சதுர சாதனத்தைப் பொருத்தி 1500 முறை வரை வெடிக்கலாம். மிகவும் பாதுகாப்பானதாக தயாரிக்கப்பட்டுள்ள இதன் விலை ரூ. 200 ஆகும்.
பவர் ரேஞ்சர்ஸ் என்பது மற்றொரு வகை. இந்த துப்பாக்கியில் முனையில் மருந்து அடைக்கப்பட்டிருக்கும். துப்பாக்கியை அழுத்தியபடி, துப்பாக்கியின் முன்புறம் கம்பி மத்தாப்பூ, சாட்டை அல்லது சிறிய தீப்பந்தத்தைக் காட்டினால் பூச்சட்டியிலிருந்து வெளிவருவது போன்று ஒளி சிந்தும். தங்க நிறத்தில் இது ஒளி சிந்துவதை பார்க்கும் போது பரவசமாக இருக்கும். இதன்விலை ரூ.150ஆகும்.
விண்ணைக் கலக்கும் வெடிகள்: ஒவ்வொரு ஆண்டும் வான வெடிகளில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டின் அறிமுகம், கோல்டன் ஆக்டோபாக்ஸ் என்ற பட்டாசு. இதை பற்ற வைத்ததும் சுமார் 400 அடி உயரம் சென்று , தங்க வண்ணத்தில் ஒளிசிந்துகிறது. அந்த ஒளி சுமார் 40 அடி அகலம் விரியும். இதைப் போல ஹெக்கர் அட்டாக்ஸ், காட்ஸில்லா, நைட்புழு கேர்ள், சில்வர் ரைடு, கோல்டு ஸ்பைடர், வாரியர்ஸ், ஜெம்பார்க் உள்ளிட்ட ரகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் ரூ. 300 முதல் 500 வரை உள்ளன. 
விண்ணில் சுமார் 300 அடி உயரம் சென்று ஒளிசிந்தும் வகையில், ஹாரிபட்டர், கொரில்லா, புராக்கன் உள்ளிட்டவைகளும், 150 அடி உயரம் சென்று வெடிக்கும் ஒளிசிந்தும் சுவீடன், நார்வே, லண்டன் உள்ளிட்ட பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. 
போன்சா கார்டன் என்ற வகை பட்டாசு ஒரு முறை பற்ற வைத்தால் அடுத்தடுத்து 100 முறை விண்ணில் சுமார் 100 அடி உயரம் சென்று பல வண்ணங்களில் ஒளிரும். 
இது குறித்து திருத்தங்கலில் பட்டாசு வியாபாரம் செய்து வரும் டி.கணேசன் கூறியதாவது: முன்பு பல பட்டாசு நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான பட்டாசு ரகங்களை அறிமுகம் செய்து வந்தன. தற்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 200 முதல் 250 ரகங்கள் வரை உள்ளன.
ப ல நிறுவனங்கள் தற்போது சந்தையில் உள்ள ரகங்களே போதும் என்ற நிலையில் உள்ளனர். சில ஆண்டுகளாகவே அணுகுண்டு உள்ளிட்ட அதிக சத்தம் வரும் பட்டாசு வாங்குவோர் குறைந்து, விண்ணில் சென்று ஒளிசிந்தும் பட்டாசுகளையே விரும்பி வாங்குகிறார்கள். எனவே அந்த ரக பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்து வருகிறோம். பட்டாசு வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிவருகிறது. இதனால் இந்தத் தொழில் மேலும் வளர்ச்சி பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com